போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த சிறுவன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம் போலீசார் வலைவீச்சு


போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த சிறுவன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம் போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Feb 2020 10:30 PM GMT (Updated: 25 Feb 2020 8:32 PM GMT)

நாகையில், போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த சிறுவன் கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் பல்வேறு பகுதிகளில் செல்போன் திருடப்படுவதாக போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக நாகையை சேர்ந்த 18 வயது சிறுவனை நேற்று முன்தினம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் பிடித்தனர்.

தொடர்ந்து அந்த சிறுவனை நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சிறுவனிடம் கைவிலங்கு அணிவித்து விசாரணை செய்தனர். நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் அந்த சிறுவன், சிறுநீர் கழிக்க போவதாக போலீசாரிடம் கூறினான்.

கைவிலங்குடன் சிறுவன் தப்பி ஓட்டம்

இதையடுத்து அந்த சிறுவனை சிறுநீர் கழிக்க ேபாலீசார் அனுமதி அளித்தனர். அந்த நேரத்தில் அந்த சிறுவன் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை தள்ளிவிட்டு போலீஸ் நிலையத்தை விட்டு கை விலங்குடன் வெளியே தப்பி ஓடினான். உடனே பெண் போலீஸ் கூச்சலிட்டார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ், விசாரணையில் இருந்த போலீசார் ஆகியோர் சிறுவனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த சிறுவன் தப்பி ஓடி விட்டான். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகையில், விசாரணைக்காக அழைத்து வந்த சிறுவன் கைவிலங்குடன் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story