தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் 650 பேர் பங்கேற்பு


தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் 650 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 9:20 PM GMT)

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 650 பேர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் தொடக்கவிழா தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நேற்றுகாலை நடந்தது. போட்டிகளை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதி‌‌ஷ்டராஜ் வரவேற்றார்.

கால் பாதிப்பு, பார்வையற்றோர், காதுகேளாதோர் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இறகுபந்து, மேஜைபந்து, கைப்பந்து, கபடி ஆகிய குழு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் என 650 பேர் பங்கேற்றனர்.

பரிசு

அரசு அங்கீகரித்த டாக்டரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்று, மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலரால் வழங்கப்பட்ட சான்று கொண்டு வந்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் உத்திராபதி, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள், தொழிலதிபர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் சண்முகபிரியன் நன்றி கூறினார்.


Next Story