வேலை பறிபோனதால் விரக்தி: வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
ஆவடியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியரை வேலையிலிருந்து நீக்கியதால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,
ஆவடி அடுத்த வீராபுரம், கிரிஜா நகர், பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 26). இவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை தொழிற்சாலை நிர்வாகம் பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் உள்ளவர்களிடம் சோகத்தில் அழுது புலம்பியுள்ளார். இதற்கு வீட்டில் உள்ளவர்கள் ஆறுதல் கூறியும், சமாதானம் அடையாத கணேஷ் தொடர்ந்து விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், கணேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story