விருதுநகர் மருத்துவக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலையில் அமைவது வரப்பிரசாதம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


விருதுநகர் மருத்துவக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலையில் அமைவது வரப்பிரசாதம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2020 4:00 AM IST (Updated: 26 Feb 2020 3:25 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் முயற்சியால் விருதுநகர் மருத்துவக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலையில் அமைவது வரப்பிரசாதம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் வருகையையொட்டி நடைபெறவுள்ள பிரமாண்டவிழா குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கண்ணன், சுகாதாரதுறை இணை செயலாளர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

விருதுநகரில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படவேண்டும் என்ற இந்த மாவட்ட மக்களின் நெடுநாளைய கனவு முதல்-அமைச்சரின் முயற்சியால் நனவாகி உள்ளது. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகம் வாழும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனைப்புடன் முயற்சிகள் மேற்கொண்டார், அவரது முயற்சியால் விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படுகிறது. அதிலும் தேசிய நெடுஞ்சாலையில் அமைய உள்ள இந்த மருத்துவக்கல்லூரி இந்த மாவட்ட மக்களுக்கு முதல்-அமைச்சரின் முயற்சியால் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்றது அறிவிப்போடு நின்று விட்டது. யார் வேண்டுமானாலும் எளிதில் திட்டங்களை அறிவித்து விடலாம். மக்கள் நலன் கருதி அதனை செயல்படுத்துவதே முக்கியமாகும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது மத்திய அரசு நிதி உதவியுடன் விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைதொடர்ந்து தமிழகத்தில் விருதுநகர் உள்பட 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிக்கு மத்திய அரசின் அனுமதியும் நிதி உதவியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த 11 மருத்துவக்கல்லூரிக்கும் மத்திய அரசு ரூ,2,172 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருதுநகரில் ரூ.390 கோடி மதிப்பீட்டில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.265 கோடியும், தமிழக அரசு ரூ.125 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த மருத்துவக்கல்லூரியில் 2021-22-ம் கல்வி ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 150 மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்படுவர். தற்போதுள்ள விருதுநகர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியை மருத்துவ மாணவர் பயிற்சிக்காக பயன்படுத்துவதா அல்லது தனியாக ஆஸ்பத்திரி அமைப்பதா என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளுக்கு மட்டும் தனியாக ரூ.444 கோடி மதிப்பீட்டில் சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் கூடுதல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இடையில் வேறு எந்த கிராம பகுதிகளுக்கும் அல்லாது இந்த 3 நகராட்சி பகுதிகளுக்கு மட்டும் இந்த கூடுதல் கூட்டுக் குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும். மேலும் 750 கிராமங்களுக்கு ஏற்கனவே முடிவடைந்துள்ள தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளில் இடம் பெற்றுள்ள 1800 கிராமங்களுக்கும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மார்ச் 1-ந் தேதி மருத்துவக்கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரி, நகராட்சி பகுதிகளுக்கான கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்ட பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவதோடு கிராமங்களுக்கான தாமிரபரணி தண்ணீர் வினியோகத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய அரசுத்துறை கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்க இந்த மாவட்ட மக்கள் தயாராகிவிட்டனர். இந்த விழா மாநாடு போல நடைபெற உள்ளது. விழாவுக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்படுவதுடன் 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரமாண்ட பந்தலும் அமைக்கப்படுகிறது.

விழாவினையொட்டி மாவட்டத்திலுள்ள 10 தாலுகாக்களிலும் இருந்து பொதுமக்கள் விழா நடைபெறும் இடத்துக்கு வருவதற்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் பாதுகாப்பான முறையில் செய்யப்பட வேண்டிய போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்தும் விழா நடைபெறும் இடத்தில் பொதுமக்களின் வசதிக்காக செய்ய வேண்டிவை குறித்தும் கலெக்டர் மற்றும் சுகாதாரதுறை இணை செயலாளர் முன்னிலையில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் பிற துறை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கலந்து கொள்வது பற்றிய தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றுத்தந்தமைக்காக முன்பு ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர்.

தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்ச் 7-ந் தேதி திருவாரூரில் விவசாய பெருமக்களாலும் விவசாய சங்க பிரதிநிதிகளாலும் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் நிலங்களை குழந்தைகளைப்போல் பராமரித்து வரும் நிலையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களால் நிலங்கள் தரிசாக போய் விடக்கூடாது என்று பயந்து கொண்டிருந்த நிலையில் அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட முதல்-அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக விவசாய சங்க பிரதிநிதிகள், முதல்-அமைச்சரை சந்திக்க வந்தபோது நான் அவருடன் இருந்தேன்.

தனியார் பால் விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவின் பால் விலை உயராது. முதல்-அமைச்சர் பொதுமக்களையும், பால் உற்பத்தியாளர்களையும் கலந்து ஆலோசித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் ஆவின் பால் விலையை உயர்த்தி அறிவித்தார். எனவே இனி ஆவின் பால் விலை உயர வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story