மாவட்ட செய்திகள்

பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள் + "||" + Sudden twist in the murder case of the woman

பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்

பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்:  மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்  திடுக்கிடும் தகவல்கள்
பேடராயனபுராவில், பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை அவருடைய மருமகளே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகி உள்ளது. மேலும் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,

பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராஜம்மா. இவர் கடந்த 19-ந் தேதி தன்னுடைய வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவருடைய நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதனால் யாரோ மர்ம நபர்கள் நகைக்காக ராஜம்மாவை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து பேடராயனபுரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலீசாருக்கு ராஜம்மாவின் மருமகள் சவுந்தர்யாவின்(வயது 21) நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரைப்பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மேலும் ராஜம்மாவை, சவுந்தர்யாவே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியது.

கள்ளக்காதல்

அதாவது ராஜம்மாவின் மகன் குமார்(26) என்பவருக்கும், சவுந்தர்யாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சவுந்தர்யா தனது கணவர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளார். அப்போது சவுந்தர்யாவுக்கும், ஒரு வாலிபருக்கும் செல்போனில் மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது சவுந்தர்யா தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொள்ள செல்போன் மூலம் போன் செய்துள்ளார். ஆனால் அது தவறான அழைப்பாக நவீன் ஜடேசுவாமி(25) என்பவருக்கு சென்றுள்ளது. இதையடுத்து சவுந்தர்யா போனை துண்டித்துவிட்டார்.

பின்னர் நவீன், அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அந்த அழைப்பை எடுத்து பேசிய சவுந்தர்யா நவீனின் பேச்சில் மயங்கினார். பின்னர் இருவரும் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர்.

அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து சவுந்தர்யாவும், அவருடைய கள்ளக்காதலன் நவீனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் சவுந்தர்யா தனது கள்ளக்காதலன் நவீனை தன்னுடைய வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம்

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சவுந்தர்யாவின் மாமியாரான ராஜம்மா வெளியூர் சென்றுவிட்டார். சவுந்தர்யாவின் கணவனும் வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்யா தனது கள்ளக்காதலன் நவீனை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் நவீனும் வந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ராஜம்மா திடீரென வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் அவர், சவுந்தர்யா தனது கள்ளக்காதலன் நவீனுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உருட்டு கட்டையால் தாக்கி...

இதையடுத்து ராஜம்மா, தனது மருமகளையும், அவருடைய கள்ளக்காதலனையும் கடுமையாக கண்டித்து, சரமாரியாக திட்டியுள்ளார். மேலும் இதுபற்றி அவர் தனது மகனிடம் தெரிவிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன சவுந்தர்யாவும், அவருடைய கள்ளக்காதலன் நவீனும் சேர்ந்து ராஜம்மாவை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கினர். மேலும் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ராஜம்மாவின் தலையில் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த ராஜம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். இதையடுத்து கொலையை மறைக்க திட்டமிட்ட சவுந்தர்யாவும், அவருடைய கள்ளக்காதலன் நவீனும் நகைக்காக கொலை நடந்ததுபோல் சித்தரிக்க முடிவு செய்தனர். அதன்பேரில் ராஜம்மா அணிந்திருந்த நகைகளை கழற்றிக்கொண்டு நவீன் தப்பி ஓடிவிட்டார்.

கைது

பின்னர் சவுந்தர்யா தனது கணவருக்கு போன் செய்து அத்தை ராஜம்மாவை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் உறவினர்கள் முன்னிலையிலும் அவர் நாடகமாடி இருக்கிறார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சவுந்தர்யாவையும், அவருடைய கள்ளக்காதலன் நவீனையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.