புகார்மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் பிளம்பர் தீக்குளிக்க முயற்சி


புகார்மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் பிளம்பர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 26 Feb 2020 5:15 AM IST (Updated: 26 Feb 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

புகார் மனுமீது நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் பிளம்பர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி திப்பு சாகிப் வீதியை சேர்ந்தவர் இருதயராஜ்(வயது 48). பிளம்பர். இவர் அங்குள்ள ஒரு வீட்டில் 2-வது மாடியில் போகியத்திற்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 7.4.2019 அன்று வீட்டில் இருந்த போது பிரான்ஸ் நாட்டில் இருந்து புதுவை வந்திருந்த அந்தோணி, எர்னேஸ்ட் உள்பட 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் இருதயராஜிடம் வீட்டை காலி செய்யச் சொல்லி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்து நகை, பணத்தை திருடி சென்றதாக தெரிகிறது.

இது குறித்து இருதயராஜ் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குள் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

இருதயராஜ் ஒதியஞ்சாலை போலீசாரை சந்தித்து வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் இருதயராஜ் நேற்று இரவு போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து புகார் மனு அளிக்க சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை அலுவலக வளாகத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் தற்போது டி.ஜி.பி.யை பார்க்க முடியாது. எனவே நாளை(இன்று) டி.ஜி.பி.யை சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இருதயராஜ், எனது புகார் மனுமீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் என்று ஆவேசமாக கூறி தன் கையில் வைத்திருந்த பையில் இருந்து கேனை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர். அங்கு வாளியில் இருந்து தண்ணீரை எடுத்து அவரது தலையில் ஊற்றினர். பின்னர் அவரை பிடித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் டி.ஜி.பி. வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story