நகையை பறிகொடுத்த வாடிக்கையாளர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


நகையை பறிகொடுத்த வாடிக்கையாளர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2020 3:30 AM IST (Updated: 26 Feb 2020 6:08 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் நகையை பறிகொடுத்த வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொங்கலூர், 

பொங்கலூர் அருகே டி.கள்ளிபாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் டி.கள்ளிப்பாளையம், பொங்கலூர், பல்லடம், கள்ளக்கிணறு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி இருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து வைத்தனர்.

ஆனால் சம்பவத்தன்று இரவு வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதில் வாடிக்கையாளர்கள் வைத்து இருந்த ஏராளமான நகைகளைஅள்ளி சென்றனர். அதாவது 116 வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்திய நிலையில், 31 பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு நகை திருட்டு போயிருந்தது. இதையடுத்து வங்கியில் கணக்கு வைத்து இருந்த வாடிக்கையாளர்கள், மற்றும் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் வங்கி முன்பு குவிந்தனர். பதற்றத்துடன் இருந்த அவர்கள் தங்களது நகை பாதுகாப்பாக உள்ளதா? அல்லது கொள்ளையர்கள் அள்ளி சென்றார்களா? என தெரிந்து கொள்ள வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நகையை பறிகொடுத்த வாடிக்கையாளர்களும், வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களும் நேற்று 2-வது நாளாக வங்கி முன்பு குவிந்தனர். பின்னர் கொள்ளை போன நகைகளை உடனே மீட்டு தர வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை வங்கி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி பல்லடம்-தாராபுரம் சாலையில் வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் வங்கி அதிகாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கொள்ளை போன நகைகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கொள்ளையர்களால் உடைக்கப்படாமல் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் நகைகளை அவற்றின் உரிமையாளர்கள் ஓரிருநாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

முன்னதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

இதே வங்கியில் ஏற்கனவே கொள்ளையர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் முதலில் சர்வர் இணைப்பை துண்டித்து விட்டு துணிகர முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பிறகு வங்கி நிர்வாகம் வங்கிக்கு காவலாளி நியமித்து இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.

தற்போது 2-வது முறையாக வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அதே போல் முதலில் சர்வர் இணைப்பை துண்டித்து உள்ளனர். பொதுவாக சர்வர் இணைப்பை துண்டிக்கும்போது அது தொடர்பான குறுந்தகவல் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியின் செல்போனுக்கு சென்று இருக்கும். அவரும் உடனே உஷாராகி போலீசாருக்கு தெரிவித்து இருந்தால் இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவம் நடந்து இருக்காது. இந்த சம்பவத்திற்கு வங்கி நிர்வாகம்தான் முழு பொறுப்பு. அவர்களின் அலட்சியத்தால் கொள்ளை நடந்து விட்டது.

முதல் முறையாக மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பின்னர், பாதுகாப்பு பெட்டகத்திற்கு எங்களால் பாதுகாப்பு தர முடியாது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்து இருந்தால், நாங்கள் அப்போதே உஷாராகி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து இருந்த நகையை எடுத்து இருப்போம். இப்போது வங்கி நிர்வாகத்தை முழுமையாக நம்பி மோசம் போய் விட்டோம். எங்களது நகையை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story