காலமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து “மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகையை பறிகொடுத்து விட்டேன்” - விவசாயி கண்ணீர் பேட்டி


காலமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து “மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகையை பறிகொடுத்து விட்டேன்” - விவசாயி கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2020 3:30 AM IST (Updated: 26 Feb 2020 6:08 AM IST)
t-max-icont-min-icon

காலமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து மகளின் திருமணத்திற்காக சேர்த்துவைத்திருந்த நகைகள் பறிபோய் விட்டதே என்று நகையை பறிகொடுத்த விவசாயி கண்ணீர் மல்க கூறியது பரிதாபமாக இருந்தது.

பொங்கலூர்,

பல்லடம் அருகே உள்ள கோட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன், விவசாயி. இவருடைய மனைவி பத்மாவதி. பொங்கலூர் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வரதராஜன் 50 பவுன் நகை வைத்து இருந்தார். இந்த நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து வங்கிக்கு சென்ற வரதராஜன், நகை பறிபோனது தகவல் தெரிந்ததும் வங்கிக்கு சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கடுமையாக உழைத்தால்தான் விவசாயத்தில் வருமானம் கிடைக்கும். அந்த வருமானத்தை செலவு செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தோம். தங்கம் விற்கும் விலைக்கு மொத்தமாக வாங்க முடியாது. எனவே மகளின் திருமணத்திற்காக 50 பவுன் நகை வாங்கினோம்.

அந்த நகையை வீட்டில் வைத்தால் பாதுகாப்பாக இருக்காது என்று கருதினோம். மேலும் அதிக பாதுகாப்பு உடையது பொதுத்துறை வங்கிதான் என நினைத்து, டி.கள்ளிபாளையம் பாரத ஸ்டேட் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தோம். அதன்பின்னர் எங்களுக்கு நிம்மதி. ஏனெனில் நகை பாதுகாப்பாக வைத்து விட்டோம் அல்லவா. இந்த நிலையில் எங்களது நகைகொள்ளை போய்விட்டதாக கூறி இருப்பதாக அதிகாரிகள் கூறியதால், நாங்கள் நிலை குலைந்து போனோம். எப்படி எனது மகளை கரை சேர்ப்பேன்.

காலமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த நகையை கொள்ளையர்கள் அள்ளி சென்று விட்டார்களே. என்னைப்போன்று பலரும் தங்களது ஆயிரம் பவுனுக்கும் அதிகமான நகையை இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து இருந்தனர். அவைகளும் கொள்ளை போனது. ஏற்கனவே கொள்ளை முயற்சி நடந்தபோது உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து இருந்தால் நகை தப்பி இருக்குமே. எனவே எனக்கு நகைகள் மீண்டும் கிடைக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நகையை இழந்த வாடிக்கையாளர் டி.கள்ளிப்பாளையத்தை சேர்ந்த திலகவதி கூறியதாவது:-

நவீன தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் எவ்வளவு பெரிய பாதுகாப்பை வங்கிக்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் எந்த பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தாமல் வங்கி நிர்வாகத்தின் அலட்சியபோக்குதான் கொள்ளை நடந்ததற்கு காரணம்.

இன்றைக்கு இருக்கும் தங்கம் விலைக்கு பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு மொத்தமாக நகை வாங்க முடியாது. எங்களை போன்றவர்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம்கொஞ்சமாக தங்கம் வாங்கினோம். பின்னர் வீட்டில் வைத்தால் கூட பாதுகாப்பு இருக்காது என கருதி வங்கி பெட்டகத்தில் 30 பவுன் நகையை வைத்தோம். ஆனால் நிலைமை இப்படி ஆகி விட்டதே. நகைக்கு வங்கி நிர்வாகம்தான் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டப்பாளையம் சங்கீதா கூறியதாவது:-

மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில் வாழ்க்கை சக்கரம் சுழன்றாலும் எதிர்கால நலன்கருதி, 30 பவுன் நகை வாங்கி, அதை வங்கி பெட்டகத்தில் வைத்தோம். வங்கியில் பாதுகாக்க முடியாது என்று வங்கி நிர்வாகம் கூறியிருந்தால் எங்கள் நகையை எடுத்து இருப்போம். ஆனால் வங்கி நிர்வாகம் முழுக்க அலட்சியமாக செயல்பட்டு விட்டது.

தனியார் நிறுவனத்தை போல் பொதுத்துறை வங்கி நிர்வாகம் செயல்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.

ஒவ்வொரு வங்கியின் பாதுகாப்பு பெட்டக பாதுகாப்பு இணைப்பை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் இணைத்து இருப்பார்கள். ஆனால் இந்த வங்கியில் இணைக்கவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. மேலும் வங்கியின் 5 நிமிடம் மெயின் சர்வர் துண்டிக்கப்பட்டால் கூட சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு தகவல் உடனே சென்று விடும். உடனே அவர் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கலாம். ஆனால் இந்த வங்கியில் மெயின் சர்வர் துண்டிக்கப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையிலும் வங்கியின் பாதுகாப்பு கேட்பாரற்று போனது. இதனால் வங்கி நிர்வாகம்தான் முழு பொறுப்பு. அவர்கள் எங்களது நகையை முழுமையாக மீட்டு தரவேண்டும. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story