தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகில் 50 ஏக்கரில் பல்லுயிர் பெருக்க பூங்கா கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகில் 50 ஏக்கரில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகில் 50 ஏக்கரில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட 13 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி பாளையங்கோட்டை ரோடு வழியாக குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று, பாலவிநாயகர் கோவில் வழியாக மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் காற்று மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வு கொண்ட பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும், காற்று மாசுபடுதலினால் ஏற்படும் தீமைகள், நோய்கள் மற்றும் சுற்றுசூழல் கேடுகளைப் பற்றி முழக்கங்களை எழுப்பி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்பபுணர்வு துண்டுப்பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா, தூத்துக்குடி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பென்சர் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பல்லுயிர் பெருக்க பூங்கா
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு உள்ளது. இதே போன்று ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள தேசிய பசுமைப்படை மாணவ–மாணவிகளை ஈடுபடுத்தி மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பள்ளிக்கூடம் அளவில் மாணவ, மாணவிகள் இடையே மாசு கட்டுப்பாடு தொடர்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தூத்துக்குடி விமான நிலையத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ.1 கோடி மதிப்பில் அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மீன்வளக்கல்லூரி அருகில் 50 ஏக்கர் பரப்பில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காவுக்கு முதல்–அமைச்சர் கடந்த 22–ந் தேதி அடிக்கல் நாட்டினார்.
ஒத்துழைப்பு
மேலும் ஒவ்வொரு மாதமும் மாசு கட்டுப்பாடு தொடர்பாக அலுவலர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாசு அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி மாநகராட்சி மூலம் மாசு கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள் முறையாக கடைபிடித்து மாசு இல்லாத மாவட்டமாக மாற்றிட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story