மேற்கு வங்காள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; கலெக்டர் வழங்கினார்


மேற்கு வங்காள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2020 3:45 AM IST (Updated: 26 Feb 2020 7:02 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதியிலுள்ள செங்கல் சூளைகளில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

 வெளிமாநிலத்தை சேர்ந்த அவர்களின் குழந்தைகளுக்கு செண்பகராமன் புதூர் அரசு தொடக்க பள்ளி, சமத்துவபுரம் தொடக்க பள்ளி, குருசடி ஆர்.சி.நடுநிலை பள்ளி ஆகியவற்றில் தனி ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1,200 மதிப்புள்ள பேக், சீருடை, மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 அதன்படி 88 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மோகனன், குருசடி ஆர்.சி.நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாக்கியசீலன் வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர் ஹரிகுமார், மாவட்ட ஒருங்கிணப்பாளர்கள் ராஜன், சுபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, வெளிமாநில மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அவர் வங்க மொழியில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் அந்த மாணவர்களுக்கு தமிழை நன்றாக சொல்லி கொடுங்கள் என்று ஆசிரியர்களை கேட்டு கொண்டார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், செண்பகராமன் புதூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் மாலா, ஊராட்சி துணை தலைவர் தேவதாஸ், வார்டு உறுப்பினர் தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் தலைமை ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

Next Story