வாகைகுளத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: சுங்கச்சாவடி மேலாளர், ஒப்பந்தக்காரர் ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு


வாகைகுளத்தில் கூடுதல் கட்டணம் வசூல்:  சுங்கச்சாவடி மேலாளர், ஒப்பந்தக்காரர் ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 27 Feb 2020 3:30 AM IST (Updated: 26 Feb 2020 7:36 PM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடி மேலாளர், ஒப்பந்தக்காரர் ஆகியோர் ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி, 

வாகைகுளம் சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூலித்த வழக்கில், சுங்கச்சாவடி மேலாளர், ஒப்பந்தக்காரர் ஆகியோர் ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சுங்கச்சாவடி 

நெல்லை வி.எம்.சத்திரம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் பிரம்மநாயகம். வக்கீல். இவர் கடந்த 3–1–2019 அன்று நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு கோர்ட்டுக்கு காரில் சென்றார். அப்போது வாகைகுளம் சுங்கச்சாவடியில் இருவழி அனுமதிக்காக ரூ.85 செலுத்தி ரசீது பெற்றார். பின்னர் கோர்ட்டுக்கு சென்று விட்டு மதியம் 2–18 மணிக்கு மீண்டும் வாகைகுளம் சுங்கச்சாவடிக்கு சென்ற போது, மீண்டும் ரூ.60 செலுத்தவேண்டும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறி உள்ளனர்.

இதனால் பிரம்மநாயகம் ஏற்கனவே இருவழிக்கு அனுமதி பெற்று இருப்பதாக கூறினாராம். ஆனால் அதனை ஏற்காமல், ரூ.60 பெற்றுக் கொண்டு கார் எண்ணை தவறாக பதிவு செய்து ரசீது கொடுத்து உள்ளனர். இது குறித்து பிரம்மநாயகம் வாகைகுளம் சுங்கச்சாவடி மேலாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் சுரேந்திரகுமார் சுக்லா ஆகியோரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நஷ்டஈடு 

இதைத் தொடர்ந்து பிரம்மநாயகம், கூடுதலாக வசூலித்த சுங்கச்சாவடி கட்டணம் ரூ.60 மற்றும் மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.95 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரியும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நுகர்வோர் கோட்டு தலைவர் மு.தேவதாஸ், உறுப்பினர் அ.சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விசாரணைக்கு எதிர்மனுதாரர்கள் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு தலைவர், வாகைகுளம் சுங்கச்சாவடி மேலாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் சுரேந்திரகுமார் சுக்லா ஆகியோர் பிரம்மநாயகத்துக்கு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.60 மற்றும், சேவை குறைபாடு காரணமாக மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக நஷ்டஈடு ரூ.15 ஆயிரம், மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story