கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது ; ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
பெரம்பலூர்,
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். ஏசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதனாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் காலை ஆராதனையின் போது கடந்த ஆண்டு பயன்படுத்திய குருத்தோலையை எரித்து அதன் சாம்பலை அந்தந்த ஆலயங்களின் பங்குத்தந்தைகள் மற்றும் மூத்த கன்னியாஸ்திரிகள் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.
தவக்காலத்தையொட்டி பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தில் மறைவட்ட முதன்மை குருவும், பங்குத் தந்தையுமான ராஜமாணிக்கம் தலைமையில் நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் பங்குத் தந்தைகள் ராஜமாணிக்கம், வாலிகண்டபுரம் பீட்டர், சமூக சேவை இயக்கத்தின் இயக்குனர் சேவியர், துணை இயக்குனர் எடிசன் ஆகியோர் கிறிஸ்தவர்களின் நெற்றில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டனர்.
இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவர்களின் இல்லங்களில் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்காது. மாமிச உணவுகளையும் தவிர்த்து உபவாசம் இருப்பர். இந்த காலங்களில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமை மாலையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. ஏப்ரல் 10-ந் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது, 12-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Related Tags :
Next Story