நெல்லை மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் ஷில்பா வெளியிட்டார்
நெல்லை மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஷில்பா வெளியிட்டார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஷில்பா வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
நெல்லை மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள பட்டியலை நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் ஷில்பா வெளியிட்டார். மாநகராட்சி பகுதிக்கான பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் கண்ணனும், ஊரக பகுதிகளுக்கான பட்டியலை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அருணாசலமும் பெற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ஷில்பா கூறியதாவது:–
நெல்லை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சிக்கும், 2 நகராட்சிகளுக்கும் மற்றும் 18 பேரூராட்சிகளுக்கும் வார்டுகள் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது.
2011–ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்டு வார்டுகளுக்கு ஏற்ப 2020–ம் வருட உள்ளாட்சி தேர்தலுக்காக ஊரகம், நகர்ப்புற பகுதியில் வரைவு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள விவரம் மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட கலெக்டரால் ஒப்புதல் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
வரைவு வாக்குச்சாவடிப்பட்டியல்கள் கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சி பிரிவு அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்கள், நெல்லை மாநகராட்சி அலுவலகம், நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை ஆகிய மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், பாளையங்கோட்டையில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம், அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளின் அலுவலகங்கள், நகராட்சி வார்டு அலுவலகங்கள், பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
2–ந் தேதி கூட்டம்
அறிவிப்பு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி பட்டியல் பற்றி பொதுமக்கள், தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களுக்கான வாக்குச்சாவடி மறுப்புரைகளை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். அல்லது வருகிற 2–ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story