நெல்லை அருகே பஸ்–கார் மோதல்: ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலி மற்றொரு சம்பவத்தில் ஆட்டோ மோதி தொழிலாளி சாவு
நெல்லை அருகே பஸ்–கார் மோதிக் கொண்டதில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலியானார்.
நெல்லை,
நெல்லை அருகே பஸ்–கார் மோதிக் கொண்டதில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலியானார். மற்றொரு சம்பவத்தில் ஆட்டோ மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்
நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த மூளிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 62). ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர். முருகன், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திலும் பணியாற்றி உள்ளார். இவர் நேற்று மதியம் காரில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அவரே கார் ஓட்டிக் கொண்டு சென்றார்.
திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் நெல்லையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. பாளையங்கோட்டையை அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது, காரும், அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
பலி
இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கிய முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
இடிபாட்டில் சிக்கி இருந்த முருகனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் காயம் அடைந்த பஸ் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிலர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பி சென்றனர்.
மற்றொரு சம்பவம்
நெல்லை அருகே உள்ள மேலக்குன்னத்தூர் ஞானியார் கட்டளை தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவர் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பீடிக்கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பெருமாள் நேற்று காலை பீடி இலைகளை ஏற்றிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மேலக்குன்னத்தூரில் இருந்து பாடகசாலை வழியாக மேலப்பாளையம் சென்று கொண்டு இருந்தார்.
குன்னத்தூரில் இருந்து பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக் கொண்டு நெல்லை டவுனை நோக்கி ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த பரமசிவன் (34) என்பவர் ஓட்டி வந்தார். குன்னத்தூர் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். ஆட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகளுக்கு காயம் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், பெருமாள் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story