கர்ணன்போல் ஏழைகளுக்கு விஜயகாந்த் வாரி வழங்கியுள்ளார் ; பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
கர்ணன்போல் ஏழைகளுக்கு விஜயகாந்த் வாரி வழங்கியுள்ளார் என்று திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டியில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் பி.கே. சுப்பிரமணியம் இல்ல திருமண விழா நேற்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், தலைமை தாங்கினார். மாநிலத் துணைச் செயலாளர் அக்பர், மாநில மகளிரணி செயலாளர் மாலதி வினோத் ,மாவட்ட செயலாளர்கள் கோபால், முத்து வெங்கடேஸ்வரன், தியாகராஜன், முருகன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களைவாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மணமக்கள் கார்த்திகேயன்- சிவரஞ்சனி இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்களை எனது சார்பிலும், கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். விஜயகாந்த் நலமுடன் உள்ளார்.
ஒரு சிறிய கதையை உங்களிடம் சொல்கிறேன். கர்ணன் மிகப் பெரிய கொடை வள்ளல். ஆனால் அவர் அன்னதானம் செய்தது கிடையாது. கர்ணன் இறந்த பின் சொர்க்கத்திற்கு சென்றபோது அங்கு அவருக்கு பசி ஏற்பட்டது. பசியை போக்க உங்களுடைய ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள்ளவும் என ஒரு முனிவர் சொல்ல, அதன்படி செய்த கர்ணனுக்கு பசி் போய்விட்டது. அப்போது அந்த முனிவர் பூலோகத்தில் ஒரு வழிப்போக்கன் அன்னதானம் எங்கு கிடைக்கும்? என உங்களிடம் கேட்டதற்கு அதோ அங்கே உள்ளது என உங்களின் ஆள்காட்டி விரலை காட்டி கூறியதால் உங்களுக்கு தற்போது பசி தீர்ந்துள்ளது என்றார்.
அதுபோல்தான் விஜயகாந்தும் திரைப்படம் மூலம் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்காக பொருள்களாகவும், தானமாகவும் வாரி வழங்கியுள்ளார். நிச்சயமாக சொல்கிறேன் விஜயகாந்தின் வழிகாட்டுதலில் தே.மு.தி.க ஒரு நல்ல தமிழகத்தை உருவாக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட துனை செயலாளர் வாசுதேவன், தலைவர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், சசிகுமார், பொன்னுசாமி, நகர செயலாளர்கள் தாேமாதிரசாமி, தரணி முருகன், தே.மு.தி.க. தெற்கு மாவட்ட நிர்வாகிகள் குமாரசாமி, முருகானந்தம், ஜீவானந்தம், லாவண்யா, குமரகாந்த், ராஜேஷ், தாமரைச்செல்வி, பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், வெங்கடாஜலபதி உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்களும் மணமக்களை வாழ்த்தினார்கள்.
Related Tags :
Next Story