குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது தீவிரவாதிகளை ஒழிக்கத்தான்; அமைச்சர் பேச்சு
குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்தது தீவிரவாதிகளை ஒழிக்கத்தான் என்று சத்தியமங்கலத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணராஜ் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். சத்தி ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு 6 மாதத்திலோ, ஒரு வருடத்திலோ... என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் இன்று வரை வெற்றிகரமாக அரசு செயல்பட்டு வருகிறது. நாடு செழிப்பாக உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. சிறுபான்மையினருக்கு ஒரு இடர் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் அவர்களுக்கு அரணாக இருப்பார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது தீவிரவாதிகளை ஒழிக்கத்தான்.
இந்தியாவிலேயே தமிழகம்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் 3-வது இடத்தில் உள்ளது. அதனால்தான் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க தேடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி, தலைமை கழக பேச்சாளர் கோவை புரட்சித்தம்பி உள்பட பலர் பேசினார்கள்.
ஊராட்சி தலைவர்கள் சரவணன் (கொமராபாளையம்), சத்யா சிவராஜ் (சதுமுகை), அம்மு ஈஸ்வரன் (மாக்கிணாங்கோம்பை) உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். முடிவில் சத்தி நகர எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story