அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தீவிரம்


அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 Feb 2020 3:45 AM IST (Updated: 26 Feb 2020 8:49 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெருந்துறை, 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்தின் தெற்கு பகுதி, ஊத்துக்குளி ஒன்றியம், நம்பியூர் ஒன்றியம் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அவினாசி ஒன்றியம், அன்னூர் ஒன்றியம் ஆகியவை வானம் பார்த்த பூமி பகுதிகளாகும். நிலத்தடி நீர் வளம் குறைந்து, வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த இப்பகுதிகள் வளம்பெற அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தார்கள். ரூ.1,600 கோடி மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியும் அளித்தார்.

இந்தநிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் பணிகள் விரைந்து முடிய நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டப்பணிக்கு ரூ.500 கோடியை முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து பவானி காலிங்கராயன் அணை பகுதியில் தொடங்கி ஐ.ஆர்.டி.பொறியியல் கல்லூரி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம், பெருந்துறை திருவாச்சி அருகே உள்ள சோளிபாளையம், திங்களூர் போலநாய்க்கன்பாளையம், நம்பியூர் எம்மாம்பூண்டி மற்றும் கோவை மாவட்டம் அன்னூர் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவிலான நிலமட்ட நீர் பிடிப்பு தொட்டிகள் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. அங்கிருந்து குழாய்கள் மூலம் நீரை உந்தி தள்ளும் பம்பிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெருந்துறையை அடுத்துள்ள திருவாச்சி சோளிபாளையம் கிராமத்தில் தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பணிகள் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இக்கிராமத்தில் 75 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட நிலமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

இந்த பணிகள் நடக்கும் இடம் பாதுகாக்கப்பட்ட பகுதி போல கட்டுமான நிறுவனத்தால் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story