சாத்தான்குளம் கல்லூரியில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய முயற்சிப்பதாக புகார்
சாத்தான்குளம் கல்லூரியில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்,
பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய முயற்சிப்பதாக புகார் தெரிவித்து சாத்தான்குளம் கல்லூரியில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மகளிர் கல்லூரி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2003–ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. 6 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படும் இந்த கல்லூரியில் 1,175 மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 41 பேராசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சாத்தான்குளம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கல்லூரியானது, அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து இங்கு நிரந்தர பணியிடத்தில் பேராசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
இதற்கிடையே இந்த கல்லூரியில் பி.பி.ஏ. பாடப்பிரிவில் பணியாற்றும் பேராசிரியை கோகிலாவுக்கு பதிலாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியை இளம்பரிதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று காலையில் கல்லூரிக்கு சென்ற பேராசிரியை கோகிலாவை வருகை பதிவேட்டில் கையெழுத்திட கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது. இதை தொடர்ந்து அவரை பணிநீக்கம் செய்ய முயற்சிப்பதாகவும், படிப்படியாக மற்ற பேராசிரியைகளையும் பணி நீக்கம் செய்ய முயற்சி நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து சக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள், பேராசிரியை கோகிலாவுக்கு ஆதரவாக, வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் கொளுத்தும் வெயிலும் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீக்குளிப்போம்
இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர்கள் கூறுகையில், ‘இங்கு பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் நெட், ஸ்லெட் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளோம். எங்களை பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதற்கு மாறாக, கல்லூரியின் முன்னேற்றத்துக்காக உழைத்த எங்களை பணிநீக்கம் செய்தால் அனைவரும் தீக்குளிப்போம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரையிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கல்லூரி முதல்வர் சின்னத்தாய், சாத்தான்குளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பேராசிரியர்கள், மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் மாலையிலும் நீடித்தது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story