பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிய வேண்டும்; அமைச்சர் தகவல்
உதவி கலெக்டர் நிலையில் உள்ள அலுவலர்களை நியமித்து பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிய வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரிய அலுவலர்களுடன் துறைசார்ந்த பணிகளை மேம்படுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவுநீர் வடிகால் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். கரூர் நகராட்சிக்குட்பட்ட கரூர், இனாம் கரூர் மற்றும் தாந்தோணி, குளித்தலை நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு உதவி கலெக்டர்கள் நிலையில் உள்ள அலுவலர்களை நியமித்து பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்த பணிகளை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தால் உடனடியாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் அதில் உள்ள சிரமத்தை தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அதிகம் தொடர்புகொள்ளும் நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரிய அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, அக்கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரவாரிய அலுவலர்கள் குளித்தலை, சங்கரமணியம்பட்டி, பாகநத்தம் மற்றும் வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் துணை மின் நிலைய பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுப்பதுடன் எங்கெல்லாம் குறைந்த மின் அழுத்தம் உள்ளது என்பதை கண்டறிந்து இன்னும் எத்தனை துணை மின் நிலையங்கள் வேண்டும் என்பதை அறிக்கை தயார் செய்து கொடுக்க வேண்டும்.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் இணையும் பகுதியில் விபத்து ஏற்படும் சூழல் இருந்தால் அப்பகுதிகளை அலுவலர்கள் கண்டறிந்து தெரிவித்தால் சாலை பாதுகாப்பு நிதியினை பெற்று அதன் மூலம் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்து கொடுக்கப்படும். அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிசைப் பகுதி மாற்றுவாரியம் மூலம் வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க ஏதுவாக தகுந்த இடங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்தை பொறுத்தவரை கரூர் நகராட்சியில் உள்ள மூன்று குடிநீர் திட்டங்களில் மீதம் உள்ள பணிகளையும், தோைகமலை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளையும், மூக்கணாங்குறிச்சி பகுதியில் நடைபெற்று வரும் 274 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்ட பணிகளையும் கோடைகாலம் தொடங்கும் முன் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி மூலம் நாள்தோறும் குப்பைகளை சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம்பிரித்து சேகரிக்க வேண்டும். குப்பை சேகரிக்கும் வண்டிகள் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். கரூர் காமராஜ் மார்க்கெட் உள்பகுதி பயனில்லாமல் உள்ளதால் அந்த இடத்தில் பழம் மற்றும் காய்கறிகள் சேகரிக்கும் குளிர்பதனகிடங்கு அமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களைத்தேடி அனைத்து திட்டங்களும் சென்றடையவேண்டும். எனவே துறைசார்ந்த அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர் பணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கண்ணதாசன், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துகுமார், நகராட்சி ஆணையர்கள் சுதா (கரூர்), புகழேந்தி (குளித்தலை), வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story