குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை பா.ஜ.க. பறிக்கிறது; ஜோதிமணி எம்.பி. பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை பா.ஜ.க. பறிக்கின்றது என ஜோதிமணி எம்.பி. கூறினார்.
கரூர்,
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஜோதிமணி எம்.பி. கலந்து கொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இது எளிய மக்களுக்கான அலுவலகம் ஜனநாயகத்திலும் சரி, அரசியலிலும் சரி, அதிகாரம் என்பது வலு உள்ளவர்கள் பக்கமே நிற்கிறது. அப்படி இல்லாமல் அதிகாரம் என்பது சாதாரணமக்களுக்கானது என்பதை உணர்த்தும், ஏழை, எளிய மக்கள் உரிமையுடன் அணுகும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. தொகுதியில் வழக்கமாக ஜெயிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 200, 300 இடங்களில் நன்றி சொல்வது வழக்கம். ஏனென்றால் கரூர் பாராளுமன்ற தொகுதி 4 மாவட்டங்களில் வரும் ஒரே தொகுதி ஆகும். ஆனால் நாங்கள் தொகுதிக்கு உட்பட்ட 6800 கிராமங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து நன்றி சொல்லி விட்டு, அங்கு உள்ள பிரச்சினைகளை தெரிந்து கொண்டோம்.
பின்னர் அதன் அடிப்படையில் பாராளுமன்ற நிதியை எடுப்பது என்ற அடிப்படையில் இதுவரை 4380 கிராமங்களுக்கு சென்று உள்ளோம். இன்னும் 2000 கிராமங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. வரும் மே 31-ந்தேதியுடன் அந்த பயணத்தை முடிக்க உள்ளோம். அதன் பிறகு மக்களிடம் பெற்ற மனுக்கள் அடிப்படையில் அதனை தொகுத்து என்ன மாதிரியான பிரச்சினைகள் உள்ளது என்பதை உணர்ந்து அதனை தீர்க்க முயற்சி எடுப்போம். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்றது. வழக்கமாக தேசிய மக்கள் தொகை பதிவேடு சென்செக்ஸ் ஆக்ட் கீழ் நடக்கும். இந்த முறை முதல் முறையாக சென்செக்ஸ் ஆக்ட் கீழ் நடக்காமல் திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்தின் கீழ் நடக்கிறது. எனவே இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் சாதி, மத, இன பாலின வேறுபாடு இல்லாமல் வந்து அவர்களின் உரிமைகளை பறிக்கும் செயல். கண்ணியத்தை குலைக்கும் செயல்.
இதனால் தான் இதை மக்கள் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள். மக்களும் எதிர்கட்சிகளும் அமைதியான வழியில் போராடுகிறார்கள். மக்களுக்கு எதிராக ஒரு அரசாங்கம் குறி வைப்பதை மக்கள் உணர்ந்து உள்ளதை அறிந்து, அதை மக்கள் அறிய விட கூடாது என்பதற்காகவும் மீண்டும் மக்கள் போராட்டம் நடந்து விட கூடாது என்பதற்காக, ஆளும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.உடன் சென்று வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இதை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. இந்த நிலைமை தமிழகத்திற்கு வந்து விட கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகம் தொழில் வளர்ச்சியில், கல்வியில் முன்னேறிய மாநிலம். இன்றைக்கு கரூர் உள்பட பல நகரங்களில் தொழில் நசிந்து போய் பலர் வேலை இழக்கும் நிலை உள்ளது. தற்போது நமக்கு தேவை வேலை வாய்ப்பு, கல்வி, மக்களுக்கான உரிமை பொருளாதார வளர்ச்சி தான். போராட்டத்தை யாரும் தூண்ட தேவை இல்லை. சாதாரண மக்களுக்கு ஆபத்து வருகிறது என்றால் அதை எதிர்த்து போராடத்தான் செய்வார்கள். போராடுவது என்பது ஜனநாயக நாட்டில் உள்ள ஒரு உரிமை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story