அனுமதியின்றி பேரணி-பொதுக்கூட்டம்: எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு


அனுமதியின்றி பேரணி-பொதுக்கூட்டம்: எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 27 Feb 2020 4:00 AM IST (Updated: 26 Feb 2020 10:45 PM IST)
t-max-icont-min-icon

புத்தாநத்தம் பகுதியில் அனுமதியின்றி பேரணி-பொதுக்கூட்டம் நடத்தியதாக எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி உள்பட 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் கடந்த 24-ந் தேதி ஜமாத்தார்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல்- கட்சியினர் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை கைவிட வலியுறுத்தியும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புத்தாநத்தம் பகுதியில் உள்ள திண்டுக்கல் சாலையில் மேடை அமைக்கப்பட்டு இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி, எம்.எல்.ஏ. அபூபக்கர், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

3 ஆயிரம் பேர் மீது வழக்கு

இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இதனால் அனுமதியின்றி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியதாக புத்தாநத்தம் கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், பொதுமக்களுக்கும்,- போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திடும் வகையில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்தியது தொடர்பாக எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி, எம்.எல்.ஏ. அபுபக்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் 20 பேர் உள்பட 3 ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story