‘பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக துணிப்பை’ மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவ-மாணவிகள் பங்கேற்பு


‘பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக துணிப்பை’   மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி   மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை மாணவர்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை, 

பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை மாநகராட்சி கமி‌‌ஷனர் கோ.பிரகா‌‌ஷ் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமில் 1,300 மாணவ, மாணவிகள் மற்றும் 62 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதில் பிளாஸ்டிக் உபயோகிப்பதினால் ஏற்படும் சுகாதார கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பாரம்பரியமாக பயன்படுத்தக் கூடிய வாழை இலைகள், பாக்கு மர தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கண்காட்சி மூலமாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் உபயோகிப்பதினால் ஏற்படும் தீங்குகள் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை மாணவர்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story