வட்டிக்கு பணம் கொடுத்தவரை கைது செய்யக்கோரி, செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் - திண்டுக்கல்லில் பரபரப்பு
வட்டிக்கு பணம் கொடுத்தவரை கைது செய்யக்கோரி, தேசிய கொடியுடன் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்நகர் காளியம்மன் கோவில் அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் கையில் தேசிய கொடியுடன் வந்தார். பின்னர் அவர், திடீரென அங்கிருந்த செல்போன் கோபுரத்தில் ஏறினார். தனது கையில் பிடித்திருந்த தேசிய கொடியை பறக்க விட்டப்படி கோஷமிட்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
பின்னர் அவரை கீழே இறங்கும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபர் அவர்களுக்கு செவிசாய்க்கவில்லை. தனக்கு பணம் கொடுத்தவர் வட்டி கேட்டு மிரட்டுவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இல்லையெனில், தான் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார், அந்த வாலிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறினர்.
இந்தநிலையில் அந்த வாலிபர், தனது சட்டை பையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து கீழே வீசினார். அதை எடுத்து போலீசார் பார்த்தனர். அதில், தான் சிறுமலையை அடுத்த பொன்னுருவி கிராமத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் மூக்கையா (வயது 32) என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் விவசாய செலவுக் காக ஒருவரிடம் பணத்தை கடனாக வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை வட்டியுடன் சேர்த்து திரும்ப செலுத்திய பிறகும் கடன் கொடுத்தவர் இன்னும் அசல் தொகையை செலுத்தவில்லை என்று கூறி தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தான் செல்போன் கோபுரத்தில் தேசிய கொடியுடன் ஏறியதாக அந்த கடிதத்தில் மூக்கையா குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அவரை கீழே இறங்க வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த மூக்கையா செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அவர், வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இனிவருங்காலத்தில் இதுபோன்று தற்கொலை மிரட்டல் விடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story