முத்துப்பேட்டையில் 12-வது நாளாக இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டம் கண்ணில் கருப்பு துணி கட்டினர்


முத்துப்பேட்டையில் 12-வது நாளாக இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டம் கண்ணில் கருப்பு துணி கட்டினர்
x
தினத்தந்தி 26 Feb 2020 11:30 PM GMT (Updated: 26 Feb 2020 6:56 PM GMT)

முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று 12-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டினர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை புதுத்தெரு திடலில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி கடந்த 15-ந்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று 12-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன்அலி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தப்பாசித்திக், அன்சாரி, வக்கீல் தீன்முகமது, அபுபக்கர் சித்திக், சம்சுதீன் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் பங்கேற்று எதிர்ப்பு கோ‌‌ஷங்கள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன.

கண்ணில் கருப்பு துணி கட்டினர்

அதனை தொடர்ந்து நேற்று இரவு நடந்த போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் முகமது ரியாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், டெல்லியில் நடந்த கலவரத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முகமதுமிஸ்கின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கூத்தாநல்லூர்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கூத்தாநல்லூரில் நேற்று 12-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெரியபள்ளி ஜமாத்தார்கள் மற்றும் பள்ளிவாசல் ஒருங்கிணைப்பாளர்கள், இஸ்லாமியர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Next Story