சிறுபான்மையினருக்கு அ.தி.மு.க. அரசு, எப்போதும் பாதுகாப்பு அரணாக உள்ளது - மணிகண்டன் எம்.எல்.ஏ. பேச்சு


சிறுபான்மையினருக்கு அ.தி.மு.க. அரசு, எப்போதும் பாதுகாப்பு அரணாக உள்ளது - மணிகண்டன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசு சிறுபான்மையினருக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக உள்ளது என்று மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அரண்மனை முன்பு நடைபெற்றது. நகர் செயலாளர் அங்குச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- ஜெயலலிதாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ராமநாதபுரத்திற்கு மருத்துவ கல்லூரியை பெற்றுத் தருவேன் என வாக்குறுதி அளித்தேன். அது நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே ரூ.70 கோடியில் சட்டக்கல்லூரி கட்டப்படுகிறது. மேலும் இங்கு மத்திய நூலகம் அமைக்கவும், விமான நிலையம் அமைக்கவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும்.

குந்துகால் மற்றும் மூக்கையூரில் ரூ.200 கோடி செலவில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகங்கள் கட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகரில் ரூ.5 கோடி செலவில் புதிதாக சாலைகள் போடப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. எப்போதுமே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறது. தற்போது உலமாக்களுக்கான பென்சன் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹஜ் பயணிகளுக்காக சென்னையில் ரூ.15 கோடி செலவில் பயணிகள் விடுதி கட்டப்படுகிறது.

சிறுபான்மையினரின் நலனுக்காக தி.மு.க. இதுவரை எதுவுமே செய்யவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இந்த சட்டம் குறித்து தி.மு.க. சிறுபான்மையினர் மத்தியில் விஷத்தை விதைக்கிறது. சி.ஏ.ஏ. குறித்து சட்டமன்ற விவாதத்தில் பதில் கூற முடியாமல் ஸ்டாலின் திணறுகிறார். ஏனென்றால் இந்த சட்டம் பற்றி அவருக்கு எதுவுமே தெரியவில்லை.முஸ்லிம் மக்களை யாராலும் இந்த நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் ரோட்டில் இறங்கி போராடும் முதல் எம்.எல்.ஏ. நானாகத்தான் இருப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர்கள் டெல்லியில் செயல்படாமல் உள்ளார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், முன்னாள் யூனியன் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் நகரசபை தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பாசறை செயலாளர் பால்பாண்டியன், நகர் துணை செயலாளர் செல்வராணி ரத்தினம், தஞ்சி சுரேஷ், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் நாகஜோதி, நகர் பொருளாளர் ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சர்வேஸ், நகர் பாசறை செயலாளர் மணிகண்டன், தொழிலதிபர் ஆர்.ஜி.ரத்தினம், வட்ட செயலாளர்கள் முத்துப்பாண்டி, ஆதில் அமின், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராமசேது, டாஸ்மாக் ராபர்ட் உள்பட கட்சினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ராம்கோ துணைத் தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

Next Story