விழுப்புரம் மாவட்டத்தில், மீனவர்களுக்கான திறன் வாழ்வாதார பயிற்சி


விழுப்புரம் மாவட்டத்தில், மீனவர்களுக்கான திறன் வாழ்வாதார பயிற்சி
x
தினத்தந்தி 26 Feb 2020 10:00 PM GMT (Updated: 26 Feb 2020 7:38 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் மீனவ மக்களின் நலனுக்காக திறன் வாழ்வாதார பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம், 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுயதொழில் செய்ய விருப்பமுள்ள மீனவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு திறன் வாழ்வாதார பயிற்சியாக கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி, மின்சார பணியாளர், பிளம்பிங், வெல்டர், ஏ.சி. மெக்கானிக், கணினி பயிற்சி, இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன பழுதுபார்ப்பு, படகு எந்திரம் பழுதுபார்ப்பு, அழகுக்கலை, தையல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவ மக்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோட்டக்குப்பத்தில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் அளிக்கப்பட்டு வந்த முதல்கட்ட பயிற்சியின் நிறைவு விழா நடந்தது.

இதற்கு திட்ட ஒருங்கிணைப்பாளரான உதவி கலெக்டர் (பயிற்சி) சிவ கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் ராஜா வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன், பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் வாசுதேவன், இந்திய சாலை பாதுகாப்புக்கழக மேலாண் இயக்குனர் ராதாகிரு‌‌ஷ்ணன், துணை இயக்குனர் மீனாட்சி, விழுப்புரம் கனரா வங்கி மேலாளர் கிருபாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சி குறித்து உதவி கலெக்டர் (பயிற்சி) சிவ கிரு‌‌ஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், இப்பயிற்சி குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராம மீனவ மக்களிடம் விளக்கியதன் விளைவாக 2 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர். முதல் கட்டமாக கடந்த நவம்பர் மாதம் தொடங்கி 320 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் மாத உதவித்தொகையுடன் செயல்முறையாக கற்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கு சுயதொழில் தொடங்கவும், வங்கி கடன் பெற்றுத்தரும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இவை தவிர வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு அழகுக்கலை பயிற்சி பெற்ற பெண்கள், பயிற்சியின்போதே சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சம்பாதித்து வருகின்றனர். இதேபோல் படகு எந்திரம் பயிற்சி பெற்ற இளைஞர்களும் தங்கள் பகுதியில் பழுதடைந்த படகுகளை சரிசெய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். அதில் 3 பேர் ஓமன் நாட்டு வேலைவாய்ப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். அனைத்து மீனவ கிராமத்தினரும் இப்பயிற்சியை பெறும் வகையில் இந்த திட்டம் தொடரும். எனவே விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். பயிற்சி முடித்த மீனவ மக்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story