உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்: மாநகராட்சி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு 2-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் வார்டு வாரியான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக 2-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
சென்னை,
உள்ளாட்சி தேர்தலுக்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 5 ஆயிரத்து 759 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களுக்கு 135 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 135 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5 ஆயிரத்து 489 வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்த வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து வார்டு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துகளை கேட்பதற்காக வருகிற 2-ந்தேதி அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் மார்ச் 6-ந்தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story