`தினத்தந்தி' செய்தி எதிரொலி: போலீசார் நடத்திய வேட்டையில் பெண் சாராய வியாபாரி சிக்கினார் - தலைமறைவான மேலும் 2 பேருக்கு வலைவீச்சு


`தினத்தந்தி செய்தி எதிரொலி: போலீசார் நடத்திய வேட்டையில் பெண் சாராய வியாபாரி சிக்கினார் - தலைமறைவான மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

`தினத்தந்தி' செய்தி எதிரொலியால் கடலூர் பகுதியில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் பெண் சாராய வியாபாரி பிடிபட்டார். மேலும் தலைமறைவான 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது மற்றும் சாராயம் கடத்தி வருவதை தடுக்க முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனை நடத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் சிலர் கள்ளத்தனமாக சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்து கடலூர் பகுதியில் உள்ள வீடு, சுடுகாடு மற்றும் புதர் போன்ற மறைவிடமான பகுதிகளில் பதுக்கி வைத்து படுஜோராக விற்பனை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக கடலூர் பாதிரிக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து `தினத்தந்தி' யில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் சாராயம் விற்பனை செய்வோரை பிடிக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் உட்கோட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் போலீசார் பாதிரிக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வேட்டையில் களம் இறங்கினர்.

இதில் கடலூர் நத்தவெளிச்சாலையில் தென்னந்தோப்புக்குள் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வண்டிப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மனைவி சுந்தரி(வயது 60) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். இவரிடம் இருந்த 120 லிட்டர் சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல்செய்தனர். விசாரணைக்கு பிறகு சுந்தரியை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

அதேபோல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்த லட்சுமி(42), கணபதி நகரை சேர்ந்த பாஞ்சாலி(48) ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. 2 வீடுகளிலும் இருந்தும் மொத்தம் 120 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றினர். போலீசார் வருவதை அறிந்து லட்சுமி, பாஞ்சாலி ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story