ஆண் யானை தந்தத்தால் குத்தியதால் உடலில் காயங்களுடன் தவிக்கும் பெண் யானை - வனத்துறை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு
ஆண் யானை தந்தத்தால் குத்தியதால் உடலில் காயங்களுடன் தவிக்கும் பெண் யானைக்கு வனத்துறை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
வால்பாறை,
வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்குட்பட்ட பெரியகல்லார் வனப்பகுதியில் இருந்த யானைகள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆண் யானை பெண் யானையுடன் உறவு கொள்வதற்காக முயற்சித்துள்ளது. ஆனால் பெண் யானை இதற்கு அனுமதிக்காமல் போனதால் ஆத்திரமடைந்த ஆண் யானை பெண் யானையை பலமாக தாக்கி கீழே தள்ளி தனது தந்தத்தால் குத்தி உடல் முழுவதும் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உடலில் காயங்களுடன் இருந்த அந்த பெண் யானை யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்து உபாசி மற்றும் கல்லார் எஸ்டேட் பகுதிக்கும் இடைப்பட்ட வனச்சோலை பகுதிக்கு வந்தது. ஆனால் அதற்கு மேல் நடக்க முடியாத நிலையில் நின்று விட்டது.
இதுகுறித்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் நடராஜன், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை களஇயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன், வால்பாறை அரசு கால்நடை டாக்டர் மெய்யரசன், வனச்சரகர் தங்கராஜ், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று நடக்கமுடியாமல் தவிக்கும் பெண் யானையை பார்வையிட்டனர்.
அப்போது பெண் யானையின் உடலில் கால், அடிவயிறு, நெற்றி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததும், அந்த காயங்களில் புரையோடிப் போன நிலையில் காயங்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது தெரிந்தது.
இதனை தொடர்ந்து வனத்துறை டாக்டர் குழுவினர் யானைக்கு உணவில் வைத்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக கால்நடை டாக்டர் மனோகரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story