உயர் அழுத்த மின்பாதையின் கீழ் மின்காந்த அலைவீச்சை ஆய்வு செய்த 5 எம்.பி.க்கள்


உயர் அழுத்த மின்பாதையின் கீழ் மின்காந்த அலைவீச்சை ஆய்வு செய்த 5 எம்.பி.க்கள்
x
தினத்தந்தி 27 Feb 2020 3:45 AM IST (Updated: 27 Feb 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

உயர் அழுத்த மின்பாதையின் கீழ் நின்று கொண்டு மின்காந்த அலை வீச்சை 5 எம்.பி.க்கள் ஆய்வு செய்தனர்.

பல்லடம், 

உடுமலையில் இருந்து அரசூர் வரை செல்லும் 400 கிலோ வாட் உயர் மின் கோபுர பாதை பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய விளை நிலங்களின் வழியாக செல்கிறது. இந்த உயர் அழுத்த மின்கம்பியின் மின் காந்த அலை வீச்சு பற்றி கள ஆய்வை எம்.பி.க்கள் சுப்பராயன் (திருப்பூர்), நடராஜன் (கோவை), கணேசமூர்த்தி(ஈரோடு), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), ஜோதிமணி (கரூர்) ஆகியோர் மேற்கொண்டனர். அப்போது உடலில் மின்சாரம் பாய்வதை மின்சார பரிசோதனை கருவி மூலம் கண்டறிந்தனர்.

அதே போல் மின் பாதையின் கீழ் நின்று டியூப் லைட்டை கையில் பிடித்தனர். அப்போது டியூப் லைட் எரிந்தது. இதனை கண்டு எம்.பி.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து எம்.பி.கள் கூறியதாவது:-

பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளையும், தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றும் விதத்தில் உயர் மின் கோபுரதிட்டத்தால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. மக்களை அச்சுறுத்தி எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. மின் காந்த அலை வீச்சால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கும் ஆபத்து உள்ளது.எனவே மாநில அரசு நேரடியாக தலையிட்டு தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்துவிட்டு தான் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உண்மையான வளர்ச்சி அல்ல. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவது தான் உண்மையான வளர்ச்சி ஆகும். உயர் மின் கோபுரதிட்டத்தை விவசாயிகளும், பொதுமக்களும், நாங்களும் எதிர்க்கவில்லை, அதே சமயம் தேசிய நெடுஞ்சாலைகளின் அடியில் இந்த புதைவடமாக கேபிள் வழியாக வைத்துக் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அப்படி கொண்டு செல்வதால் செலவு அதிகம் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கின்ற முறையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதை தான் நாங்களும்,மக்களும் கடுமையாக எதிர்க்கிறோம்.

மத்திய,மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கானதாக உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஏவல் வேலை செய்வதும் அடிமை வேலை செய்வதும் தான் அ.தி.மு.க. அரசின் நோக்கம். அதற்காக தமிழக மக்கள், விவசாயிகள் அனைவருடைய நலன்களையும் எல்லா விதங்களிலும் அ.தி.மு.க. அரசு அடகு வைத்துவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் பல்லடம் கடைவீதியில் எம்.பி.க்கள் கலந்து கொண்ட கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story