அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு: வீட்டில் வேலை செய்த கட்டிட மேஸ்திரி கைது
திருவள்ளூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் தங்க நகை, பணம் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்து வந்த கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் விஜி (வயது 39). இவர் பூண்டி ஒன்றிய அ.தி.மு.க.வின் 13-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் ஆவார்.
மேலும் இவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதியன்று விஜியின் சித்தப்பாவான சுப்பிரமணி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார்.
அதில் கலந்து கொள்வதற்காக விஜி தனது குடும்பத்தாருடன் சென்றார். அதைத்தொடர்ந்து இறுதி சடங்கை முடித்து விட்டு அன்றிரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பீரோவில் இருந்த 59¾ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 70 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.
கட்டிட மேஸ்திரி கைது
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில், புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் திருடியது அவரது வீட்டில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்த திருவள்ளூரை அடுத்த நெய்வேலி கிராமம் அன்னைசத்யா நகரை சேர்ந்த முருகன் (49) என தெரியவந்தது.
இதற்கிடையே, போலீசார் நேற்று அவரை பூண்டி அருகே பதுங்கி இருந்தபோது, சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை பிடித்து விசாரித்த போது, விஜி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
சிறையில் அடைப்பு
மேலும் அவரிடம் இருந்து 40 பவுன் தங்க நகையையும், ½ கிலோ வெள்ளி பொருட்களையும், ரூ.28 ஆயிரத்து 500-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில் முருகன் கூறியதாவது:-
ஒன்றிய கவுன்சிலர் விஜியின் வீட்டில் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக தங்கியிருந்து, அவருடன் காண்டிராக்ட் தொழிலில் மேஸ்திரியாக பணிபுரிந்து வந்ததால், அவர் வீட்டில் அதிகமாக பணம் மற்றும் நகை இருந்ததை அறிந்து கொண்டேன்.
இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று அவர்கள் அனைவரும் துக்க வீட்டுக்கு சென்றபோது, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டேன். இருப்பினும் போலீசார் என்னை சுற்றி வளைத்து கைது செய்தனர் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட முருகனை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட முருகன் மீது சென்னை, காஞ்சீபுரம் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story