கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது லாரி மோதி டிரைவர் சாவு
கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 30). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் ஆக்கிணாம்பட்டு கிராமம் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தணிகைவேல் (33), ஏழுமலை (35), பிரகாஷ் (28), பிளஸ்-2 மாணவி ராஜலட்சுமி (16) மற்றும் பவுஞ்சூர் கிராமத்தை சேர்ந்த திலக் சாம்ராஜ் (32) ஆகியோரை ஏற்றி கொண்டு வடபட்டினம் கிராமத்தில் இருந்து பவுஞ்சூர் கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆட்டோவில் இருந்தவர்கள் வட பட்டினம் கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கிராமத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தட்டாம்பட்டு கிராமத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது மோதியது.
சாவு
இதில் ஆட்டோ சேதம் அடைந்தது. ஆட்டோவில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ஆட்டோ டிரைவர் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story