கன்னட திரைப்பட நட்சத்திர ஜோடி சந்தன்ஷெட்டி-நிவேதிதா திருமணம் மைசூருவில் நடந்தது
தசரா விழா மேடையில் காதலை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கன்னட திரைப்பட நட்சத்திர ஜோடி சந்தன்ஷெட்டி-நிவேதிதா திருமணம் மைசூருவில் நேற்று நடந்தது.
மைசூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சாந்திகிராமத்தை சேர்ந்தவர் சந்தன்ஷெட்டி (வயது 30). இவர் கன்னட திரையுலகில் நடிகர், இசைஅமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். மேலும் ராப் இசை பாடகரும் ஆவார். அதுபோல் கன்னட திரையுலகின் பின்னணி பாடகியாக இருந்து வருபவர் நிவேதிதாகவுடா (20). இவரது சொந்த ஊர் மைசூரு ஆகும்.
இவர்கள் இருவரும் சேர்ந்து கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்-பாக்ஸ் சீசன்-5ல் கலந்துகொண்டனர். அப்போது இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த பிக்பாக்ஸ்-5ல் சந்தன்ஷெட்டி வெற்றியாளராக தேர்வானார்.
தசரா விழா மேடையில் காதலை வெளிப்படுத்தினர்
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2019) நடந்த மைசூரு தசரா விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியின் போது சந்தன்ஷெட்டி, நிவேதிதா கவுடாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். இதனை நிவேதிதா கவுடாவும் ஏற்றுக்ெகாண்டார். உடனே சந்தன்ஷெட்டி அவரது விரலில் மோதிரம் அணிவித்தார்.
மேலும் விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் என்றும் அவர்கள் அறிவித்தனர். தசரா விழா மேடையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரம்பரிய விழாவான தசராவை அவர்கள் அவதூறு செய்துவிட்டதாகவும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
மைசூருவில் திருமணம்
இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி சந்தன்ஷெட்டி-நிவேதிதாகவுடா திருமண நிச்சயத்தார்த்தம் மைசூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து நடந்தது. அதைதொடர்ந்து நேற்று இந்த கன்னட திரைப்பட நட்சத்திர தம்பதிக்கு மைசூருவில் உள்ள ஸ்பெக்ட்ரா திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
அதாவது நேற்று காலை 8.15 மணி முதல் காலை 9 மணி வரையிலான மீன லக்கனத்தில் தாரா முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணம் ஷெட்டி சமுதாய முறைப்படி நடந்தது.
சொகுசு கார் பரிசு
இந்த திருமணத்தில் சந்தன்ஷெட்டியின் பெற்றோர் பரமேஸ்-பிரமிளா, நிவேதிதா கவுடாவின் தந்தை ரமேஷ், தாய் ஹேமா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்ததை தொடர்ந்து மணமக்களுக்கு சந்தன்ஷெட்டியின் பெற்றோர் சிவப்பு நிற சொகுசு காரை பரிசளித்தனர்.
எனது வாழ்வில் மாற்றம்
இதுகுறித்து நடிகர் சந்தன்ஷெட்டி நிருபர்களிடம் கூறுகையில், நான் இதுவரை எனது வீட்டில் துணையில்லாமல் வசித்தேன். இன்று முதல் எனது மனைவியுடன் வசிக்க இருக்கிறேன். எனது வாழ்க்கையில் இன்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமானது. அதுபோல் எங்களுக்கும் திருமண வாழ்க்கை முக்கியமானது. கர்நாடக மக்களின் ஆசிர்வாதத்தால் நாங்கள் திருமண வாழ்வில் இணைந்துள்ளோம். எனக்கு நடந்த திருமணம் ஒரு வேடிக்கையானது என்றார்.
இதுபற்றி நிவேதிதா கவுடா கூறுகையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் விரும்பியவரை கரம் பிடித்துள்ளேன். எனது கனவு இன்று நிறைவேறியுள்ளது. சந்தன் ஷெட்டியை திருமணம் செய்துகொண்டதன் மூலம் நான் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் உள்ளேன் என்றார்.
Related Tags :
Next Story