டெல்லி வன்முறை சீக்கிய எதிர்ப்பு கலவரத்தை நினைவுபடுத்துகிறது சிவசேனா சாடல்


டெல்லி வன்முறை   சீக்கிய எதிர்ப்பு கலவரத்தை நினைவுபடுத்துகிறது   சிவசேனா சாடல்
x
தினத்தந்தி 27 Feb 2020 4:58 AM IST (Updated: 27 Feb 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி வன்முறை 1984-ம் ஆண்டில் நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவரத்தை நினைவுபடுத்துகிறது என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.

மும்பை, 

டெல்லி வன்முறை தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் வன்முறை வெடித்து உள்ளது. மக்கள் சாலைகளில் கத்தி, வாள் மற்றும் துப்பாக்கிகளுடன் வலம் வருகின்றனர். சாலைகள் முழுவதும் ரத்தம் சிதறி கிடக்கிறது. கடந்த 1984-ம் ஆண்டில் நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின் மோசமான யதார்த்தத்தை வெளிப்படுத்தும் திகில் படத்திற்கு இணையாக டெல்லி வன்முறை காட்சிகள் உள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் வெடித்த வன்முறையில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு பாரதீய ஜனதா இன்னும் காங்கிரசை குற்றம் சாட்டி வருகிறது.

டெல்லியில் தற்போது ஏற்பட்டு உள்ள வன்முறைக்கு யார் காரணம் என்பதை தெரியப்படுத்த வேண்டும். மிரட்டுவது போன்றும், எச்சரிப்பது போன்றும் சில பாரதீய ஜனதா தலைவர்களின் பேச்சு இருக்கிறது.

தலைநகர் பற்றி எரிந்தது

டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில் நாட்டின் தலைநகர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. டிரம்ப் டெல்லிக்கு அன்பின் செய்தியுடன் வந்தார். ஆனால் அவரது முன் என்ன வெளிப்பட்டது?. ஆமதாபாத்தில் ‘நமஸ்தே', டெல்லியில் வன்முறை. டெல்லி இதற்கு முன் இந்த அளவுக்கு அவமதிக்கப்படவில்லை.

வன்முறையின் பின்னணியில் உள்ள சதி பற்றி உள்துறை அமைச்சகம் அறியாதது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும். காஷ்மீரின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் நீக்கப்பட்ட போது கலவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது. இப்போதும் வன்முறையை கட்டுப்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வியடைந்த சில நாட்களுக்கு பிறகு வன்முறை வெடித்திருப்பது என்பது மர்மமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story