பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்கள், ஓவியங்கள் இன்று ஏலம்
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்கள், ஓவியங்கள், கைக்கெடிகாரங்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகின்றன.
மும்பை,
குஜராத்தை சேர்ந்த நகை வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிரவ் மோடியை நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் நிரவ் மோடியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு, வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிரவ் மோடியின் சொத்துகள் மூலம் ரூ.55 கோடி திரட்டுவதற்கு ஏலம் நடந்தது.
இன்று முதல் ஏலம்
தற்போது, மீண்டும் நிரவ் மோடிக்கு சொந்தமான சொகுசு கார்கள், ஓவியங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் 112 விலையுயர்ந்த பொருட்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் நேரடியாகவும், 72 பொருட்கள் அடுத்த மாதம் (மார்ச்) 3 மற்றும் 4-ந் தேதிகளில் ஆன்லைன் மூலமும் ஏலம் விடப்படுகின்றன. இந்த பொருட்களை அமலாக்கத்துறை சார்பில் ‘ஷப்ரான்ஆர்ட்' என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது.
பிரபல ஓவியம்
இதில் பெண் ஓவியர் அமிர்தா ஷெர்-கில் 1935-ம் ஆண்டு வரைந்த ‘பாய்ஸ் வித் லெமன்ஸ்' என்ற பிரபல ஓவியம் ரூ.12 கோடி முதல் ரூ.18 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல நிரவ் மோடிக்கு சொந்தமான எம்.எப்.ஹூசைன், வி.எஸ்.கெய்டோண்டே, மஞ்சித் பவார், ராஜா ரவி வர்மா ஆகியோர் வரைந்த ஓவியங்களும் ஏலம் விடப்படுகின்றன.
மேலும் நிரவ் மோடியின் விலை உயர்ந்த வைர கைக்கெடிகாரங்கள் மற்றும் சொகுசு கார்கள் ஏலம் விடப்படுகின்றன. இதில் நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வகையிலான ஒரு சொகுசு கார் மட்டும் ரூ.95 லட்சத்துக்கு ஏலம்போகும் என கணிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story