சிவசேனா வளையல் அணியலாம் என பேச்சு: பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்


சிவசேனா வளையல் அணியலாம் என பேச்சு:   பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்   மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2020 5:38 AM IST (Updated: 27 Feb 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

வளையல் குறித்த பேச்சுக்கு தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

மும்பை, 

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மும்பையை சேர்ந்த எம்.ஐ.எம். கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வாரிஷ் பதான், இங்குள்ள 15 கோடி முஸ்லிம்கள் 100 கோடி இந்துக்களுக்கு மேலானவர்கள் என்று கூறினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மும்பையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், “15 கோடி 100 கோடியை விட மேலானது என்று கூறும் இந்த வாரிஸ் அல்லது லாவாரிஸ் (அனாதை) யார்?. இந்து சமூகம் சகிப்புத்தன்மையுடையது. அதனால் தான் இந்தியா அனைவரையும் அரவணைத்து செல்கிறது. இந்த பிரச்சினையில் சிவசேனா வளையல்களை அணிந்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இந்த பேச்சு தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பொதுவாக நான் கருத்து தெரிவிக்க வேண்டாம் என முடிவு செய்து உள்ளேன். வளையல் பற்றிய பேச்சுக்கு தயவு செய்து மன்னிப்பு கேளுங்கள். வளையல்கள் வலிமையான பெண்களால் அணியப்படுகின்றன. எனவே இந்த சொற்றொடரை நாம் மாற்ற வேண்டும். இதுபோன்ற கருத்து முன்னாள் முதல்-மந்திரியிடம் இருந்து வருவது மிகவும் அவமானகரமானது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story