3 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது; மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறினார்.
கணியம்பாடி,
கணியம்பாடி அருகே உள்ள மோத்தக்கல் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காமராஜ், ஆற்காடு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் தாசில்தார் சரவணமுத்து வரவேற்றார்.
முகாமில் 1,494 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் முதியோர், விதவை, முதிர் கன்னி உதவித்தொகைகள், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், மக்களை நேரடியாக அரசு சந்திக்க மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. என்றார்.
ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. பேசுகையில், ஆற்காடு நகராட்சியில் 40 ஆண்டுகளாக சுடுகாடு இல்லை. அங்குள்ள டோபிகானா இடத்தில் எனது தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ1 கோடியே 45 லட்சம் மதிப்பில் எரிவாயு தகன மேடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மோத்தக்கல் கிராமத்துக்கு வரும் அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படுவதில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். என்றார்.
இதில் கணியம்பாடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராகவன், வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி, தோட்டக்கலை உதவி இயக்குனர் சூர்யபிரபா, கம்மவான்பேட்டை டாக்டர் கார்த்தி, கால்நடை மருத்துவர் ஹேமப்பிரியா, சமூக நல அலுவலர் ரேணுகாம்பாள், கூட்டுறவு சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி, கணியம்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் கலைச்செல்வன், வருவாய் ஆய்வாளர் சிவசங்கரன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயக்குமார், சேட்டு ரமணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story