விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மத்திய- மாநில அரசுகளின் பட்ஜெட்டை கண்டித்து விவசாயிகள் கோஷம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மத்திய- மாநில அரசுகளின் பட்ஜெட்டை கண்டித்து, விவசாயிகள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய அளவு நிதியும், திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசின் பட்ஜெட்டிலும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு போதுமான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் எழுந்து நின்றனர்.
பின்னர் அவர்கள் மத்திய-மாநில அரசுகளின் பட்ஜெட்டை கண்டித்து சிறிது நேரம் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை பேசுகையில், மக்காச்சோளத்திற்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2004-ம் ஆண்டு எண்ணெய் நிறுவனம் சார்பில் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலத்தில் ஒரு புல் கூட முளைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது அந்த எண்ணெய் நிறுவனம் மீண்டும் குழாய் பதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விவசாயத்தை பாதிப்பதால் எண்ணெய் நிறுவன குழாய் களை பதிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது. மக்காச்சோளம் கொள்முதல் செய்வதில் எடை மோசடி நடைபெறுகிறது. அதனை தடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மோசடி நடைபெறுகிறது. அதனை கண்காணிக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வங்கிகள் உள்பட எங்கேயும் வாங்க மறுக்கின்றனர். அதனை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசுகையில், விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள விவசாய கடனை மத்திய-மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். நெல்லுக்கு கூடுதல் விலை அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் பார்த்தீனியம் செடிகளை அழிக்க வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியத்தை திருச்சியில் இருந்து பிரித்து பெரம்பலூரில் அமைக்க வேண்டும். குடிமராமத்து பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றார்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் பேசுகையில், சின்ன வெங்காயத்தில் திருகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அரசு வழங்க வேண்டும். ஏரிகளின் நடக்கும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் வரதராஜன் பேசுகையில், வடக்கு கிழக்கு பருவ மழையின் போது பூலாம்பாடி கீரவாடி ஏரியின் மேற்புற கருங்கல் சுவர் இடிந்ததில் தண்ணீர் வீணாகியது. எனவே அந்த சுவரை சீரமைத்து, ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருேவல மரங்களை அகற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story