1,550 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்; அமைச்சர் வழங்கினார்
12 பள்ளிகளை சேர்ந்த 1,550 மாணவ-மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
கரூர்,
தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சி மற்றும் கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட கரூர் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு இசைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 1,550 மாணவ, மாணவிகளுக்கும் அந்தந்த பள்ளிகளுக்கே நேரில் சென்று, ரூ.60 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:- தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு தனியார் பள்ளிக்கு நிகராக சீருடை, ஷூ, நோட்டு புத்தகம், பேனா, பென்சில் என்பன உள்ளிட்ட 14 வகையான விலையில்லா பொருட்களை அரசு வழங்கி வருகிறது. வசதிபடைத்தவர் களின் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிக் கணினியை, சாதாரண ஏழைவீட்டுப் பிள்ளைகளும் பயன்படுத்திட வழிவகை செய்ததும் தமிழக அரசு தான். அந்த வகையில் தமிழகத்தில் 32 லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் எளிதில் சென்று வர விலையில்லா சைக்கிள்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. நடப்பாண்டில் கரூர் மாவட்டத்திற்கு 6,236 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீட் போன்ற மத்திய அரசின் எந்தவொரு நுழைவுத்தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. கிராமங்களை நோக்கி ஸ்மார்ட் வகுப்புகளை தமிழக அரசு விரிவுபடுத்தி வருகிறது. அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவிற்கு பள்ளிச் சீருடைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், கீதா எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துக்குமார், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கமலக்கண்ணன், தமிழ்நாடு செல்வராஜ், பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story