சேரன்மாதேவி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


சேரன்மாதேவி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 9:52 PM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சேரன்மாதேவி, 

சேரன்மாதேவி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் 

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள இடையன்குளம் வடக்கு எரிக்கலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுதாசன். இவருடைய மகன் ரூபன் வேததுரை (வயது 32). விவசாய கூலித்தொழிலாளி.

இந்த நிலையில் நேற்று மதியம் ரூபன் வேததுரை ஊருக்கு அருகே புலவன் குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். குளத்தின் அருகில் சென்ற போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழி மறைத்தனர். இதனால் ரூபன் வேததுரை அதிர்ச்சி அடைந்தார்.

வெட்டிக் கொலை 

பின்னர் மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ரூபன் வேததுரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சேரன்மாதேவி போலீஸ் நிலையத்துக்கும், ரூபன் வேததுரை வீட்டிற்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரூபன் வேததுரையை மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

முன்விரோதம் காரணமா? 

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அங்கு கிடந்த தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு புலவன் குடியிருப்பு குளத்தில் மண் அள்ளும் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் ரூபன் வேததுரையை வெட்டிக் கொன்று இருக்கலாம் என்று சந்தேக்கிறார்கள். மேலும் வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட ரூபன் வேததுரைக்கு யோகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சேரன்மாதேவி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story