கடலூர் பகுதியில், 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைப்பு - அனுமதியின்றி நிலத்தடிநீரை உறிஞ்சி எடுத்ததால் அதிகாரிகள் நடவடிக்கை


கடலூர் பகுதியில், 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைப்பு - அனுமதியின்றி நிலத்தடிநீரை உறிஞ்சி எடுத்ததால் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 28 Feb 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் பகுதியில் நிலத்தடிநீரை அனுமதியின்றி உறிஞ்சி எடுத்த 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடலூர்,

தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அன்புசெல்வன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் பொதுப்பணித்துறை(நிலத்தடி நீர்) செயற்பொறியாளர் தமிழ்செல்வி, கடலூர் தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சி எடுத்த 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க சம்பந்தப்பட்ட நிலையங்கள் பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

ஆனால் இந்த அனுமதியை பெறாமல் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது தெரியவந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் மணவெளி , எம்.புதூர் அரிசிபெரியாங்குப்பம், வழிசோதனைப்பாளையம்ரோடு, காரைக்காடு ஆகிய இடங்களில் உள்ள 7 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும், நேற்று நடைபெற்ற சோதனையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை, கங்கமநாயக்கன்பாளையம், புதுக்கடை, சிங்கிரிகுடி, திருமாணிக்குழி, சங்கொலிகுப்பம் ஆகிய இடங்களில் 12 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என மொத்தம் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளோம் என்றார்.

Next Story