அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 4,000 பேருக்கு துணைவேந்தர் சூரப்பா பட்டம் வழங்கினார்
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம், அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடும் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான 16-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தலைமை தாங்கினார். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற தலைமை இயக்குனர் சேகர் சி.மண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பல்கலைக் கழக பதிவாளர் எல்.கருணாமூர்த்தி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் 4,075 பேருக்கு துணைவேந்தர் சூரப்பாவும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற தலைமை இயக்குனர் சேகர் சி.மண்டேவும் பட்டங்களை வழங்கினார்கள்.
விழாவில் சேகர் சி.மண்டே பேசும்போது, ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தான் நாம் இப்போது சவுகரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். அவற்றின் மூலமே சமூகத்தை மாற்றமுடியும். அறிவியலின் எதிர்காலமாகவும், எதிர்கால அறிவியலாகவும் செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் ஆகியவை இருக்கிறது. இன்றைய என்ஜினீயரிங் பட்டதாரிகள் அதில் கவனம் செலுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி இந்தியாவை மேலும் தலைநிமிர செய்ய வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story