திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ - குடியிருப்பு பகுதிகளை கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு


திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ - குடியிருப்பு பகுதிகளை கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 28 Feb 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளை கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் தவித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. சுமார் 2½ லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகரில் தினமும் 110 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன. பின்னர் உரப்பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை, முருகபவனத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் மொத்த குப்பையும் கொட்டப்பட்டது. இந்த குப்பை கிடங்கு 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்பட்டன. இதனால் சுமார் 15 அடி உயரத்துக்கு குப்பைகள் தேங்கி உள்ளன.

இந்த நிலையில் குப்பைகளை முழுமையாக அகற்றி விட்டு, குப்பை கிடங்கை சுத்தம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதில் ரூ.13 கோடி செலவில் தனியார் மூலம் குப்பைகள் அகற்றப்பட உள்ளன. இதற்காக எந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில், ஓரிரு நாட்களில் குப்பை கிடங்கை சுத்தம் செய்யும் பணி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் குப்பை கிடங்கின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் நேற்று மதியம் 1 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. அதில் இருந்து வெளியான தீப்பொறிகள் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் மீது விழுந்து தீப்பற்றியது. அப்போது அந்த பகுதியில் காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

மேலும் தீயணைப்பு வாகனங்கள், மாநகராட்சி தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. ஆனால், தொடர்ச்சியாக காற்று வீசியதால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் நள்ளிரவு வரை தீ அணைக்கும் பணி நடைபெற்றது. அதேநேரம் குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததில் வெளியான கரும்புகை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் சுவாசிக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். மேலும் திண்டுக்கல்-பழனி சாலையில் சூழ்ந்த புகையால் வாகன ஓட்டிகள் தவித்தனர். 

Next Story