மாவட்டம் முழுவதும் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டம் முழுவதும் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 28 Feb 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டக்கிளை தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் பச்சைவேல், சுகந்தி உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதோடு, காலிபணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம் உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பழனியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பழனி வட்டக்கிளை சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மங்களபாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தில், காலிபணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.

மேலும் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளை பொருளாளர் பாலகுருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முபாரக்அலி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Next Story