மதக்கலவரத்தை தூண்டும் அரசியல் கட்சிகளை தடைசெய்ய வேண்டும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி


மதக்கலவரத்தை தூண்டும் அரசியல் கட்சிகளை தடைசெய்ய வேண்டும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் அரசியல் கட்சிகளை தடை செய்யப்படுவதோடு அந்த கட்சி தலைவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தரும் நிலையில் விழா ஏற்பாடுகளை பார்வையிட வந்த அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதக்கலவரங்களையும் வன்முறையையும் தூண்டிவிடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதைத்தான் நாங்களும் கூறுகிறோம். மேற்குவங்காளத்தில் மம்தாபானர்ஜி, தமிழகத்தில் ஸ்டாலின், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் சமூக விரோத சக்திகளை தூண்டிவிட்டதால் அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. 2 இனங்கள் மோதுவதுபோல் ஆகிவிட்டது. இதற்கு எல்லாம் யார் காரணம். ஓடி,ஓடி கையெழுத்து வாங்கினாரே மு.க.ஸ்டாலின். சமூக பிரச்சினைக்காக கையெழுத்து வாங்கினாரா, இஸ்லாமிய மக்களின் மத்தியில் பயத்தை உண்டாக்கும் பணியை அவர் செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள சில தலைவர்கள் பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக ஏதும் அறியாத அப்பாவி இஸ்லாமியர்களை போராட்ட களத்தில் இறங்க தூண்டுகிறார்கள். அவர்களை வன்முறைக்கு இழுத்து செல்லும் பணியை தான் தி.மு.க.வும், வேறு சில அரசியல் கட்சிகளும் செய்கின்ற காரணத்தினால் டெல்லியில் வன்முறை ஏற்பட்டு உள்ளது. இந்த கலவரத்தை இரும்புக்கரம்கொண்டு அடக்கவேண்டும் என ரஜினிகாந்த் சொல்வது நியாயமான கருத்துதான். இது தவறி போகக்கூடாது. இஸ்லாமிய மக்களும் பாதுகாப்பாக வாழவேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இங்கு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெளிவாக கூறி உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் நானே பொறுப்பு என்று கூறிவிட்டார். சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று கூறியவுடன் இந்த திருத்த சட்டத்தினால் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்று கேட்டார். அதற்கு பதில் கூறமுடியாமல் மு.க.ஸ்டாலின் புறமுதுகிட்டு சென்றார். அவர் பேசவேண்டிய இடத்தில் பேசாமல் வெளியே வந்து பிரச்சினையை ஏற்படுத்துகிறார். இந்த அரசியலை முதல்-அமைச்சர் ஒருபோதும் செய்யமாட்டார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு விவசாயி என்று கூறி உள்ளார். அவர் விவசாயி என்று தானே கூறமுடியும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை. இந்த தஞ்சை மாவட்ட விவசாயிகளே முதல்-அமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர். இனிமேல் கபடநாடகம் போடக்கூடிய மு.க.ஸ்டாலின் போன்றோரின் கருத்துகள் மக்களால் புறந்தள்ளப்படும். எளிமையாக உண்மையாக நடக்கக்கூடிய முதல்-அமைச்சரின் பின்னால் தான் இன்றைய தமிழகம் இருக்கிறது.

ரஜினிகாந்த் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று கூறினார். யார் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள், அ.தி.மு.க. செய்யவில்லை, பா.ஜனதா செய்யவில்லை. எங்களுடன் கூட்டணியாக உள்ள யாரும் செய்யவில்லை. இஸ்லாமியர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இருகரம் கோர்த்து நடக்க வேண்டும் என்றுதான் எண்ணுகிறோம்.

1947-ல் மதக்கலவரத்தை தூண்டிவிட்டதுபோல் கலவரத்தை தூண்டும் கட்சிகளை தடை செய்யப்பட வேண்டும். அந்த கட்சி தலைவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவேண்டும். டெல்லியில் கலவரம் நடக்கும் வேளையில் எந்த தலைவர்களும் அங்கு இல்லை. தற்போது பா.ஜனதா அரசு தான் பதில்சொல்லிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும்போது பா.ஜனதா தவறு செய்யுமா, பா.ஜனதா எம்.எல்.ஏ. கலவரத்தை தூண்டுவதாக கூறியது உண்மை இல்லை. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீவிர விசாரிப்பதே மெய்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும்போது பா.ஜனதா கட்சியினர் கலவரத்தை தூண்ட காரணமாக இருப்பார்களா, எதற்கு எடுத்தாலும் சங்பரிவார் அமைப்புகளை குற்றம் சாட்டக்கூடாது. உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை, முதல்-அமைச்சரின் கொள்கை, அதைத்தான் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான பிரச்சினையில் சபாநாயகரே நல்ல முடிவு எடுப்பார் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியே கூறிவிட்டார். சபாநாயகர் தனக்குள்ள நல்ல அதிகாரத்தின்படி நல்ல முடிவு எடுப்பார்.

கலவரத்தில் 27 பேர் இறந்துபோய் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்துகின்றனர். கலவரத்தில் யார் இறந்தால் என்ன, இவர்களுக்கு தேவை ஓட்டுதான், ஓட்டு வங்கி தான். இதே எண்ணம்தான் மு.க.ஸ்டாலினுக்கும் உள்ளது. இதுபோன்ற அரசியல் வாதிகளை நாட்டுமக்கள் புரிந்துகொண்டார்கள். இவர்களை வரப்போகிற தேர்தலில் அரசியல் அரங்கத்தில் இருந்து அகற்றுவார்கள்.

ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான கொண்டாடும் தகுதி அ.தி.மு.க.வுக்கு தான் உள்ளது. பொள்ளாட்சி பாலியல் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். குற்றம் செய்பவர்கள் எல்லாம் வேறு மாநிலத்துக்கு ஓடிவிட்டனர். மு.க.ஸ்டாலின் பதவிக்கு வரவேண்டும் என வெறிபிடித்து பேசுகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகரிகமான அரசியல் நடத்துகிறார். மாற்று கட்சி தலைவர்களை பற்றி தரம்தாழ்ந்து பேசியதில்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் ரேஷன் கடைகளில் மக்கள் மக்காச்சோளத்திற்கும், ரவைக்கும் அழைந்தார்கள். அதை மக்கள் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நல்ல உணவு கிடைக்கிறது. இதை தடுக்கவே மத அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். மதம் என்பது மிகப்பெரிய பூகம்பம். சாதி தீக்கு ஒப்பானது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் தி.மு.க.வை, மக்களும், இஸ்லாமியர்களும் புரிந்துகொண்டார்கள். வருகிற தேர்தலில் தி.மு.க.வை அப்புறப்படுத்துவார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடரும். சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கவில்லை. சத்தியமாக சொல்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனது அறிந்து தவறு செய்யமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story