குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 28 Feb 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதுடன் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அவினாசி பகுதி முழுவதும் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ேசகரமாகும் ஏராளமான குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சேகரிக்கப்பட்டு அவைகளை அவினாசி 4-வது வார்டு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் போட்டு உரமாக மாற்றி வருகின்றனர். இதனால் அங்கு 5 ஆயிரம் டன் குப்பை மலைபோல் குவிந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள் ளது.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

அவினாசி பேரூராட்சிக்குட்பட்ட 4 மற்றும் 5-வது வார்டு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பைக்கிடங்கு உள்ளது. அவினாசி நகர ஒட்டு மொத்த குப்பைகளும் இங்கு கொண்டு வந்து மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தொற்றுநோய் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் 4, 5 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது. அதுவும் குறைந்த அளவே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் குடிநீருக்காக மேலும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது குடிநீர் வினியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ஒரு மாதத்திற்குள் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. குடிநீர் வாரியத்திலிருந்து தற்போது குறைவான அளவே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story