தூத்துக்குடியில் பா.ஜனதாவினர் பேரணி மதக்கலவரத்தை தூண்டும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நேற்று பா.ஜனதா சார்பில் பேரணி நடத்தப்பட்டது. பின்னர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
பா.ஜனதா பேரணி
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் மத கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்யும் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட பா.ஜனதா சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது.
இந்த பேரணிக்கு தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தேசிய மகளிர் அணி செயலாளர் விக்டோரியா கவுரி, சசிகலா புஷ்பா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, ‘இந்திய விடுதலைக்கு பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டம் டெல்லியில் நடந்தது தான். இதற்கு முக்கிய காரணம் தி.மு.க., காங்கிரஸ் தான். அவர்கள் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். தி.மு.க. தங்களிடம் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளனர் என்று கூறி பகல்வேஷம் போடுகிறார்கள். இந்துக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். பா.ஜனதா நடக்கும் இடம் பூ போன்றதல்ல. கல், முட்கள் அடர்ந்தது. நாம் கிராமம் தோறும் சென்று மக்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேரணியை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது வி.வி.டி. சிக்னல் பகுதியில் தொடங்கி வேம்படி இசக்கியம்மன் கோவில் முன்பு வரை சென்றடைந்தது. அதன்பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது;–
நடவடிக்கை
மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தம் செய்து ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்து சட்டமாக்கியது. இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று அரசு தெரிவித்து உள்ளது. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் காங்கிரஸ், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவைகள் ஒன்று சேர்ந்து முஸ்லிம் அமைப்புகளை தூண்டிவிட்டு, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த சட்டம் எதிரானது என்றும், இதன் மூலம் நாட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக பொய்யான பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி செய்வதுடன் அதன் மூலம் உயிர் பலியை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் கூட்டங்களில் வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருகிறார்கள். எனவே பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படும் இந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2018–ம் ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்டது போன்ற கலவரம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்த முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், பா.ஜனதா வீரமணி, ராஜாகண்ணன், சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட துணை தலைவர் தங்கம், கனகராஜ், ஈசுவரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story