ஆலங்குளம் அருகே தாய்–மகள் உள்பட 3 பேரை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை தென்காசி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஆலங்குளம் அருகே தாய், மகள் உள்பட 3 பேரை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
தென்காசி,
ஆலங்குளம் அருகே தாய், மகள் உள்பட 3 பேரை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
தகராறு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 75). இவருக்கு 2 மனைவிகள். இவரது மூத்த மனைவியின் மகள் பேச்சிதாய் (48). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் திருமணம் ஆகி, 6 மகள்கள் இருந்தனர்.
அதே ஊரில் உள்ள வடக்குத்தெருவை சேர்ந்த நயினார்தேவர் மகன் முத்துராஜ் என்ற ஆண்டவர் (32). இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார்.
கடந்த 12–2–2016 அன்று பேச்சிதாயின் மகள் கோமதியிடம் முத்துராஜ் தகராறு செய்தார். இதுகுறித்து பேச்சிதாய் அன்றே ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், முத்துராஜை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து அனுப்பினர். அதிலிருந்து முத்துராஜ் பேச்சிதாயின் குடும்பத்தின் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
3 பேர் வெட்டிக்கொலை
இந்த நிலையில் கடந்த 16–3–2016 அன்று பேச்சிதாய் குளத்து வேலைக்காக சென்றுவிட்டு நெட்டூர் அய்யனார் கோவிலுக்கு கீழ்ப்புறம் உள்ள ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த முத்துராஜ் பேச்சிதாயை பார்த்து, ‘‘எவ்வளவு தைரியம் இருந்தால் என் மீது போலீசில் புகார் செய்வாய்‘‘ என்று கூறி தகராறு செய்து, கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் பேச்சிதாய் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதை பார்த்து, அந்த இடத்தின் அருகில் வயலில் நின்று கொண்டிருந்த பேச்சுதாயின் மகள் மாரி (19) ஓடி வந்தார். அப்போது அவரையும் முத்துராஜ் வெட்டினார். இதில் அவரும் சரிந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து அங்கு வந்த கோவிந்தசாமியின் மகன் முருகன், மற்றொருவருடன் சேர்ந்து முத்துராஜை பிடிக்க சென்றார். அப்போது அவர், கோவிந்தசாமியையும் வெட்டிக்கொலை செய்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதையடுத்து முருகன் அவரை பின்தொடர்ந்து சென்றார். ஆனால், அதற்குள் முத்துராஜ், சுடலை கோவில் அருகில் நின்று கொண்டிருந்த கோவிந்தசாமியையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவத்தில் பேச்சிதாய், மாரி, கோவிந்தசாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தூக்கு தண்டனை
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைகள் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றம் சாட்டப்பட்ட முத்துராஜூக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து முத்துராஜை போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு வக்கீலாக ராமச்சந்திரன் ஆஜரானார். தென்காசி நீதிமன்ற வரலாற்றில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, நேற்று கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story