போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்த விளக்க கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தீபாசங்கரி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயி செல்லத்துரை பேசுகையில், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தின் முன்னேற்ற பணிகள் குறித்து அறிவிக்க வேண்டும். கோவில் நில குத்தகை, பதிவு பெற்ற குத்தகை நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
விவசாயி தனபதி பேசுகையில், இறப்பு, வாரிசு சான்றிதழ் பெற முடியாத சூழலில் உள்ளோருக்கு சிறப்பு உத்தரவு மூலம் பட்டா மாறுதல் செய்ய வேண்டும். நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும், என்றார்.
கந்தர்வகோட்டை பகுதியை காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கந்தர்வகோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய 20 நாட்களாக விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது, என்று விவசாயி ராமையன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் பேசுகையில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். இத்திட்டத்தில் அக்கினி ஆறு, தெற்கு வெள்ளாறு வருகிறது. இதுபோன்று, ஆலங்குடி தாலுகாவில் உள்ள வில்லுனி ஆறு மற்றும் அம்புலி ஆற்றையும் இணைக்க வேண்டும், என்றார்.
விவசாயி சோமையா பேசுகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும், என்றார்.
கோட்டைக்காட்டில் சேதம் அடைந்துள்ள வெட்டியான் குளத்துக்கான தடுப்பணையை சீரமைக்க வேண்டும், என்று விவசாயி செங்கோல் கேட்டுக்கொண்டார்.
டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கென பிரத்யேகமாக குழு அமைத்து, அதில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை பிரதிநிதிகளாக சேர்க்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, என்று விவசாயி சங்கர் கூறினார்.
மூலிகை உற்பத்தியாளர் சங்க தலைவர் தங்கராஜ், தெற்கு வெள்ளாற்றில் இருந்து வயலோகம் கண்மாய்க்கு வாய்க்கால் அமைக்க கேட்டுக்கொண்டார்.
விவசாயி துரைமாணிக்கம், ஆவுடையார்கோவில் பகுதியில் உள்ள கண்மாய் கரைகளில் மரக்கன்றுகளை நடவேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை 2 மாதங்களுக்கு நீட்டித்து தர வேண்டும். ஆவுடையார்கோவில் வேளாண் துறைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக விடுபட்டு உள்ளோருக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும். ஆவுடையார்கோவிலில் ஆவின் பால் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும், என்றார்.
விவசாயி அத்தாணி ராமசாமி, கல்லணை கால்வாய் மேம்பாட்டு பணியை உடனடியாக தொடங்கி கடை மடைக்கு தண்ணீர் வர நட வடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை உடனடியாக செய்து கொடுத்தால் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதுதொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்படும். நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் தொழிலாளர்களுக்கான கூலியை அதிகரித்து வழங்க வேண்டும், என்றார்.
தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காமராஜ், கஜா புயலுக்கு பிறகு வெள்ளை ஈ தாக்குதல் அதிக மாக உள்ளது. இதனால் தென்னை மற்றும் ஊடுபயிர் பாதிக்கப்பட்டு உள்ளது, என்றார்.
விவசாயி சொக்கலிங்கம், தென்னை நோய் பாதிப்புக்கான மருந்துகளை வட்டார அளவில் கிடைக்க செய்ய வேண்டும். கே.சி.சி. கார்டு திட்டத்துக்கு இதுவரை எந்த கிராமத்திலும் முகாம் நடத்தப்படுவதில்லை. எந்த விழிப்புணர்வும் இல்லை. அரசின் திட்டத்தை அலுவலர்களே முடக்குகிறார்கள். எனவே, இதற்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும். வேளாண் மண்டலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்து கிராமங்களையும் சேர்க்க வேண்டும். நீர்பாசன கடன் வாங்கி 5 ஆண்டுகளாகிறது. ஆனால், இதுவரை அரசு மானியம் கிடைக்கவில்லை, என்றார்.
கரும்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகி கோவிந்தராஜ், மூடப்பட்டுள்ள குரும்பூர் தனியார் சர்க்கரை ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உழவர் விவாதக்குழு தலைவர் தினகரசாமி, மாங்காட்டில் காய்கறி, பழம், பூ அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருவதால் அப்பகுதியில் குளிர் பதன கிடங்கு கட்ட வேண்டும், என்றார்.
விவசாயி பவுன்ராஜ், கே.சி.சி. கார்டுக்கு எவ்வித நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும், என்றார். மேலும் விவசாயிகள் பலர் பேசினார்கள்.
Related Tags :
Next Story