தேனியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் ஊர்வலம் - மாநில செயலாளர் பங்கேற்பு


தேனியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் ஊர்வலம் - மாநில செயலாளர் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் ஊர்வலம் நடத்தினர். இதில் மாநில செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டார்.

தேனி,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாகவும் பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது. அதன்படி, மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேனியில் ஊர்வலம் நடந்தது. தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் முன்பு ஊர்வலம் தொடங்கியது. இதற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி துணை தலைவரும், பா.ஜ,க, மாநில செயற்குழு உறுப்பினருமான ராஜபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

மாநில செயலாளர் சீனிவாசன் பேசும் போது, ‘தமிழகத்தில் இனிமேல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்த போலீசார் அனுமதிக்கக்கூடாது. போலீஸ் துறையால் முடியாவிட்டால், போராட்டங்களை ஒடுக்கும் பணியை மத்திய அரசிடம் கொடுத்து விடுங்கள். தொடர்ந்து எதிர்ப்பு போராட்டம் நடந்தால், பா.ஜ.க. சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடத்துவோம். மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஆகவே முடியாது. பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதை அவர் பார்க்கத்தான் போகிறார்’ என்றார்.

ஊர்வலத்தின் முன்பு ஒரு சிறுமி பாரதமாதா வேடமிட்டு தேசியகொடியை ஏந்தியபடி நடந்து வந்தார். பின்னர் ஊர்வலம் பெத்தாட்சி விநாயகர் கோவில் முன்பு நிறைவடைந்தது. இ்தில் பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story